கோவையில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை சிங்காநல்லூர் தேவேந்திரகுல வீதியை சேர்ந்தவர் வேலுச்சாமி (59). கூலித் தொழிலாளி, இவருக்கு திருமணம் ஆன நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதே பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இதனிடையே வேலுச்சாமி வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, பலத்த காயங்களுடன் வேலுச்சாமி ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். தொடர்ந்து சடலத்தை மீட்ட போலீசார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர்.
வேலுச்சாமி கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டிருந்த நிலை யில், இதுகுறித்து மூன்று தனிப் படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின் றனர். வேலுச்சாமி இரண்டு நாட்களுக்கு முன்பே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், கொலைக்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை.
போலீசார் நடத்திய விசாரணையில், வேலுச்சாமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த சிவா என்பவர் மாயமானது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, போலீசார் அவரைத் தேடி வருகின்றனர்.
கோவையில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பீளமேடு பகுதியில் நவீன் என்பவரும், கிணத்துக்கடவு பகுதியில் அஸ்வின் என்பவரும், பாப்பநாயக்கன்பாளையத்தில் சாந்தி என்ற பெண்ணும் கொலை செய்யப்பட்டிருந்தனர். மேலும் ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர் அமுதனும் சக மாணவர்களால் தாக்கி கொலை செய்யப்பட்டிருந்தார்.
இதனிடையே இந்த மாதத்தில் ஐந்தாவது கொலையாக இந்த முதியவர் கொலை சம்பவம் நடந்திருப்பதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



