தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் 60-வது ஆண்டு கந்த சஷ்டி லட்சார்ச்சனை திருவிழா கடந்த 2-ம் தேதி தொடங்கியது. விழாவை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.
பின்னர் கோவில் பிரதான மண்டபத்தில் சிறப்பு யாகசாலை பூஜைகள் மற்றும் கணபதி பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனிதநீர் மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதை அடுத்து சாமிக்கு லட்சார்ச்சனை தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று தினமும் 4 காலங்களிலும் சிறப்பு லட்சார்ச்சனை மற்றும் அபிஷேக ஆராதனை, திருமுறை பாராயணத்துடன் நடைபெற்றது. பின்னர் பைபாஸ் ரோட்டில் உள்ள சாமி நிலத்தில் வானவேடிக்கையுடன் சூரசம்ஹார விழா நடைபெற்றது.
தொடர்ந்து கோவிலில் சாமிக்கு பன்னீர் அபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து பூர்த்தி ஹோமமும், இடும்பன் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகளும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நேற்று இரவு கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு பல்வேறு வகையான சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பின்னர் சாமிக்கு உபகார பூஜைகளும், திருக்கல்யாணமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க பொன்மயில் வாகனத்தில் சாமி திருவீதி உலா நடைபெற்றது.