fbpx
Homeபிற செய்திகள்ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு

ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு

தருமபுரி மாவட்டத்தில் 4,66,594 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் சிறப்புப் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டன.


‘உழுவார் உலகத்தார்க்கு ஆணி’ என்று அய்யன் திருவள்ளுவர் புகழ்ந்து பாடிய உழவர் பெருமக்களையும், அவர்களுக்கு துணையாக இருக்கும் கதிரவனுக்கும், கால்நடைகளுக்கும் நன்றிகூறி மரியாதை செலுத்தும் நன்னாளாகவும், தமிழர் அனைவரும் ஓரினம் என்ற தமிழினத்தின் சிறப்பினை உலகிற்கு பறைசாற்றும் பொன்னாளாகவும் தைப்பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.

தைப் பொங்கல் திருநாளை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்பஅட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கம் ஆகியவற்றை 2,19,33,342 குடும்பங்களுக்கு 2429.05 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

சென்னை கடற்கரை சாலை, சத்யா நகரில் உள்ள நியாய விலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினையும், இலவச வேட்டி, சேலைகளையும் வழங்கி நிகழ்வினை முதல்வர் தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை பொதுவிநியோகத்திட்ட நியாய விலைக்கடையில் 09.01.2023 அன்று பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் 463 முழுநேர நியாயவிலைக் கடைகளும், 572 பகுதிநேர நியாயவிலைக் கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் 42 நியாயவிலைக் கடைகளும் ஆக மொத்தம் 1077 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

தருமபுரி மாவட்டத்தில் புழக்கத்தில் உள்ள 4,65,867 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 727 குடும்பங்களுக்கும் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டன.

தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டத்தில் 74,368 குடும்ப அட்டைதாரர்களுக்கும், நல்லம்பள்ளி வட்டத்தில் 59,242 குடும்ப அட்டைதாரர்களுக்கும், பாலக்கோடு வட்டத்தில் 67,297 குடும்ப அட்டைதாரர்களுக்கும், காரிமங்கலம் வட்டத்தில் 52,673 குடும்ப அட்டைதாரர்களுக்கும், பென்னாகரம் வட்டத்தில் 73,455 குடும்ப அட்டைதாரர்களுக்கும், அரூர் வட்டத்தில் 61,082 குடும்ப அட்டைதாரர்களுக்கும், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் 78,477 குடும்ப அட்டைதாரர்களுக்கும் என தருமபுரி மாவட்டத்தில் 4,66,594 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு தைப்பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடிட வேட்டி – சேலை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கம் அடங்கிய பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டன.

பொங்கல் பரிசுத் தொகுப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்றுக்கொண்ட பயனாளி க.விசாலாட்சி தெரிவத்ததாவது: கணவரும் நானும் கூலி வேலை செய்து வருகிறோம். தைப்பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில் ரூ.1000/- ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு நீள கரும்பு மற்றும் வேட்டி சேலை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கியுள்ள முதல்வருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாகலஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த குமார் கூறியதாவது:

மனைவியும் நானும் கூலி தொழில் செய்து வருகிறோம். பெண்குழந்தை உள்ளது. முதல்வர் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிட பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கியுள்ளார்.

இந்த பொருட்கள் அனைத்தும் தரமாக உள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைத்து குடும்பங்களும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிட பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கிய முதல்வருக்கு கோடான கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

தொகுப்பு:
வெ.லோகநாதன்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
தருமபுரி மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img