நேற்றைய தினம் (08.07.2025) காலை, சிதம்பரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில், செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற ஒரு தனியார் பள்ளி வேன் மீது மோதியது. இந்த விபத்தில், 2 மாணவர்கள் மற்றும் ஒரு மாணவி என 3 சிறார்கள் உயிரிழந்தனர். காலையில் தனது அப்பா, அம்மாவிடம் பள்ளிக்கு போய்விட்டு வருகிறேன் என டாட்டா காட்டிய சிறார்கள், சென்ற சில நிமிடங்களில் உயிரிழந்து கிடக்கும் கோரமான காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததே விபத்துக்கு முக்கிய காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தனது பணி நேரத்தில் ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, தூங்கியதே இந்த விபத்துக்குக் காரணம் என பொதுமக்கள் மற்றும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
ஆனால் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளரோ, வேன் டிரைவர் கேட்டதால் தான் கேட்டை கேட் கீப்பர் திறந்து விட்டிருக்கிறார் எனக்கூறி தங்கள் தரப்பு மீதான குற்றச்சாட்டின் வேகத்தை மட்டுப்படுத்த முயன்றிருக்கிறார். அப்படியே நடந்திருந்தால் கூட அந்த வார்த்தைகளை அவர் கூறியிருக்கக் கூடாது. எந்த காலக்கட்டத்திலும் மூடப்பட்ட கேட்டை ரயில் கடக்கும் முன் திறப்பது மாபெரும் குற்றமாகும்.
அதனால் தான் ரயில்வே நிர்வாகம் உடனடியாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பங்கஜ் சர்மாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீது தற்போது இந்திய ரயில்வே சட்டத்தின் கீழ் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரயில்வே கேட் திறந்தே இருந்தது, யாரும் திறக்கச் சொல்லவில்லை` என வேன் டிரைவர் மட்டும் அல்ல, உயிர்தப்பிய மாணவனும் தெரிவித்து இருக்கிறார். சம்பவ இடத்தில் இருந்து, மீட்புப்பணியில் ஈடுபட்ட நபரும் இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளார்.
அது சரி; ரயில்வே கேட் திறந்து இருந்தால் இரு புறமும் ரயில்களுக்கு சிக்னல் சிவப்பில் இருந்திருக்குமே?. அதை மீறி எப்படி ரயில் வந்து பள்ளி வேன் மீது மோதியது? தன் எல்லைக்குட்பட்ட ரயில்வே கேட் மூடப்பட்டுள்ளதா, திறந்துள்ளதா? என்பதை ஸ்டேசன் மாஸ்டர் தன் இடத்தில் இருந்தே கண்காணிக்க முடியும். ரயில் வரும்போது திறந்து இருந்தால் உடனடியாக ரயில் ஓட்டுநருக்கு தெரிவித்து நிறுத்த வேண்டும் என்பது விதிமுறை. அது என்ன ஆனது? கேட் மூடப்படவில்லை என்றால், ரயிலுக்கு எப்படி சிக்னல் கிடைத்தது?
இந்த கேள்விகளுக்கெல்லாம் விசாரணை முடிந்த பின்னர் தான் பதில் கிடைக்கும் என அதிகாரிகள் சொல்லிவிட்டு கடந்து போய் விடுவார்கள். ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது. இது சாதாரண மனிதத் தவறு மட்டும் அல்லை. இந்திய ரயில்வே சிஸ்டம் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாட்டில் இயங்குகிறது என்பதே உண்மை.
கடலூர் விபத்து, ரயில்வே பாதுகாப்பில் உள்ள குறைபாடுகளையும், பணியாளர்களின் பொறுப்பின்மையின் விளைவுகளையும் மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
எனவே, கேட்கீப்பர் மீதும், வேன் டிரைவர் மீதும் பழியை போட்டு தப்பிக்காமல் உண்மையான குறைபாடுகளை களைவதற்கான நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் முன்னெடுக்க வேண்டும்!



