மும்பையில் நடத்திய உலக இளம் கண்டுபிடிப்பாளர்களின் படைப்புகளுக்கான கண்காட்சியில் விருதுகளைப் பெற்ற கோவை மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் பாராட்டினார்.
ஹெச்.எஸ்.என்.சி (HSNC) பல்கலைக்கழகமும், ஆர்காம் (ARCOMM) நிறுவனமும் இணைந்து மும்பையில் நடத்திய உலக இளம் கண்டுபிடிப்பாளர்களின் படைப் புகளுக்கான கண்காட்சி கடந்த ஜனவரி 22-ம் தேதி நடைபெற்றது.
இக்கண்காட்சியில் இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, சீனா, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஓமன், துபாய் மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து வரப்பெற்ற சுமார் 350-க்கும் மேற் பட்ட கண்டுபிடிப்புகளிலிருந்து 70 படைப்புகள் மட்டும் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டன.
ஆரோக்கிய மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
கோவை மாவட்டம், பொள்ளாச்சி உடுமலை சாலையிலுள்ள ஆரோக்கிய மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட மூன்று பள்ளிகள் மட்டுமே தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டன.
இப்பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் பா.ஹ.சாய்ஆதித், தனியாக உருவாக்கிய மழைநீர் சேகரிப்பும் நவீனமுறை பாசனமும் என்ற கண்டுபிடிப்பிற்கு முதல் பரிசும், குழு போட்டியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மு.முபஷ்ஷிர், ச.ஆயிஷா ஹீனா, மு.பிரகதிஷ், ர.சான்வி ஆகியோர் கொண்ட குழு உருவாக்கிய பார்வைத்திறன் இல்லாதவர்களுக்கான ஒலி உண்டாக்கும் ஊன்றுகோலும் அதிர்வுடன் கூடிய கையுறையும், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மு.அப்ரித்தா, ர.தி.விஜேஷ் ஸ்ரீநவ் ஆகியோர் கொண்ட குழு உருவாக்கிய எச்சரிக்கை ஒலி எழுப்பும் செயல்திறன் மிக்க பாதுகாப்பு பெட்டகம் என்ற படைப்பு ஆகிய இரண்டும் இரண்டாம் பரிசுகளைப் பெற்றன.
பார்வைத்திறன் இல்லாதவர்க ளுக்கான ஒலி உண்டாக்கும் ஊன்றுகோலும் அதிர்வுடன் கூடிய கையுறையும் கண்டுபிடிப்பு கமர்ஷியல் விருதினையும் பெற்றுள்ளது.
சிறந்த கண்டுபிடிப்பாளர்களின் மையத்திற்கான விருதினை ஆரோக்கிய மாதா மெட்ரிக் மேல்நி லைப்பள்ளிக்கும், விஷனரி லீடர் (கல்வி) என்ற விருது இப்பள்ளியின் முதல்வர் சகோதரி ஜீஸ்மரியாவுக்கும் வழங்கப்பட்டது.
உலக அளவில் நடைபெற்ற இளம் கண்டுபிடிப்பாளர்கள் படைப்புகளின் கண்காட்சியில் இந்திய நாட்டின் சார்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த இப்பள்ளி மாணவ, மாணவியரும், நிர்வாகமும் சேர்ந்து மொத்தம் 6 விருதுகளைப் பெற்றுள்ளன.
இதற்காக இம்மாணவ, மாணவியரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் பாராட்டினார்.