கோவை சாலைப் பாதுகாப்பு மாதிரி நகர் திட்டத்தின் ஒரு அங்கமாக, கோவை மாவட்ட நிர்வாகம், கோவை மாநகர காவல் மற்றும் உயிர் அமைப்பின் சார்பாக உயிர் சாம்பியன்ஸ் என்ற தொடர் சாலைப் பாதுகாப்பு நிகழ்வின் மூலமாக 10 லட்சம் பொதுமக்கள் மற்றும் சாலைப் பயனாளர்கள் பங்கேற்கும் சாலைப் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு மற்றும் விபத்தில்லா சாலைகள் வாரம் என்ற ஒரு நிகழ்வினை வரும் அக்டோபர் முதல் வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் பொருட்டு நடைபெற்ற கலந்தாலோசனை கூட்டம் ஆர். எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உயிர் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் எஸ். ராஜசேகரன் வரவேற்று உயிர் சாம்பியன்ஸ் நிகழ்வின் நோக்கங்களை எடுத்துரைத்தார்.

கோவை மாவட்ட ஆட்சி தலைவர் பவன்குமார், மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு இத்தொடர் நிகழ்வினை ஒருங்கிணைத்து செயல்படுத்த ஏதுவான வழிமுறைகளை எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்டம் முழுவதிலுமிருந்து அரசு துறை அலுவலர்கள், தொழில் துறையினர், தொழில் கூட்டமைப்பினர், மருத்துவமனை பிரதிநிதிகள், வணிக நிறுவனங்களின் கூட்டமைப்பினர், குடியிருப்போர் நலச் சங்க அலுவல்சார் பிர திநிதிகள், சமூகநல ஆர்வலர்கள், பள்ளி கல்லூரி ஆசிரியர்கள், மாணாக்கர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தமது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
நிகழ்வின் முடிவில் உயிர் அமைப்பின் புரவலர் எஸ்.வி. பாலசுப்ரமணியம் நன்றி தெரிவித்தார்.



