ஸ்ரீராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாண வியருக்கான ஒருங்கிணைப்பு விழா நடந்தது. எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசாமி தலைமை தாங்கி பேசும் போது, கல்வியாளர்களாக சிந்தனையாளர்களாக, தொழில் முனைவோராக, மாற்றங்களை உருவாக்குபவர்களாக எனப் பல விதங்களில் மேம்பட இருக்கும் மாணவிகள் கல்விக்கும் பயிற்சிக்கும் இடையிலான வேறுபாட்டை உணர்ந்து தங்களை உயர்த்திக் கொள்வதோடு தலைமைப் பயிற்சிகளையும் கல்லூரி வாழ்வில் பெற வேண்டும் என்றார்.
ஆலோசனை
தொழில்நுட்பம், டிஜிட்டல், வணிகச் செயல்பாடுகள் மற்றும் பொருளாதாரம், தணிக்கை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்தல் போன்றவற்றில் சிறந்த நிபுணத்துவமிக்க ஆலோசனைகளை வழங்கி வரும் உலகளாவிய நிறுவனமான ப்ரோவிடி நிறுவனத் தின் தொழில்நுட்ப ஆலோசகர் சுதர்சன் ஜெயராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அவர் பேசும் போது, மாணவிகள் தங்களுக்கான குறுகிய கால, நீண்ட காலக் குறிக்கோள்களைத் தீர்மானிப்பதோடு கவனம் சிதறாமல் லட்சியங்களை நோக்கி தொடர்ந்து பயணிக்க வேண்டும்.
எந்தத் துறையாக இருந்தாலும் சமீப காலத் தொழில்நுட்ப வசதிகள், மாற்றங்கள், முன்னேற்றங்களைப் பற்றி தெரிந்து கொண்டு அவற்றை கற்றுக் கொள்வதால் மற்றவர்களிடம் இருந்து தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள முடியும்.
துறை சார்ந்த அறிவோடு வாழ்க்கைத் திறன்களையும் தங்கள் ஆளுமையையும் துணிவையும் மாணவிகள் வளர்த்துக் கொள்வதோடு தொடர்ந்து பயிற்சி செய்வதும் அத்தியாவசிய மானது என்றார்.
கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா, மாணவிகளின் வெற்றிகள் சாதனைகளைக் குறிப்பிட்டு புதிய மாணவிகளை வரவேற்றார். கல்லூரி ஹெல்த் கிளப் சார்பில் ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை மூலம் பார்வையாளர்களுக்கு இலவசப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.