fbpx
Homeபிற செய்திகள்கோவையில் மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சி-: நடிகர் சத்யராஜ் தொடங்கி வைத்தார்

கோவையில் மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சி-: நடிகர் சத்யராஜ் தொடங்கி வைத்தார்

சென்னை, மதுரை மாவட்டங்களை தொடர்ந்து கோவை மாவட்ட திமுக சார்பில் தமிழக முதல்வர் பொது வாழ்க்கை வரலாற்றை வெளிப்படுத்தும் வகையில் “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்ற பெயரில் கோவை வ.உ.சி மைதானத்தில் புகைப்பட கண்காட்சி துவங்கப்பட்டுள்ளது.

இதனை நடிகர் சத்யராஜ் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் புகைப்பட கண் காட்சியை பார்வையிட்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சத்யராஜ் கூறியதாவது: சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களில் இந்த புகைப்படம் கண்காட்சி ஆரம்பிக் கப்பட்ட போது அழைத்தார்கள். போக முடியவில்லை.

தற்போது கோவையில் இந்த புகைப்பட கண்காட்சி அமைக்கப் பட்டுள்ளதாக கூறி மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அழைத்தார். ஆகையால் நேரில் இந்த கண்காட்சியை பார்த்தேன். கோவையில் போடப்பட்டுள்ள இந்த புகைப்பட கண்காட்சி மிகச் சிறப்பாக இருந்தது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தது முதல் அனைத்து புகைப்படமும் இங்கு உள்ளது. முதல்வர் ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை என அடிக்கடி கூறுவார்கள். ஆனால் இங்கு மிஷாவில் போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையுடன் இங்கு சாட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

புகைப்படங்கள் அனைத்தும் சான்றிதழ்களோடு இங்கு வைக்கப்பட்டுள்ளது. கண்காட் சியில் என்னை கவர்ந்த புகைப்படம் முதல்வர் ஸ்டாலின், கலைஞர் வேடமிட்டு பிரச்சார நாடகத்தில் நடித்துள்ளார்.

எம்.ஜி.ஆர். அதனை பாராட்டி யுள்ளார். இது திராவிட இயக்க வரலாறு சித்தாந்தத்தின் தெளிவு இந்த புகைப்படம். இரண்டு ஆண்டு திமுக ஆட்சி மிகவும் திருப்திகரமாக உள்ளது. நடுத்தர மக்கள் அவர்கள் கீழே இருப்பவர்களுடன் பேசுவேன், அவர்கள் திருப்திகரமாக உள்ளது என தெரிவித்துள்ளார்கள்.
மேலும் இந்த புகைப்பட கண்காட்சியை கோவை மக்கள் அனைவரும் இங்கு வந்து பார்க்க வேண்டும்.

ஆளுநர் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டியதில்லை ஏன் அப்படி நடந்து கொள்கிறார் என்று தெரியவில்லை. நல்ல காரியத்திற்கு நல்ல திட்டத்திற்கு ஆதரவாக செயல்பட வேண்டும்.

அதற்கு அவர் ஆதரவாக செயல்பட வேண்டும். மக்கள் நலமே முக்கியம், அதனை மனதில் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். மனிதாபிமானத்தோடு ஆளுநர் அணுக வேண்டும். சூதாட்டத்தில் பல உயிரிழப்பு ஏற்படுகிறது, சூதாட்டம் நல்லது அல்ல. இவ்வாறு நடிகர் சத்தியராஜ் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.கண்ணப்பன், எம்பி சண்முகசுந்தரம், மேயர் கல்பனா ஆனந்தகுமார், ஆர்ட் இயக்குனர், திமுக மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், தகவல் தொழில்நுட்ப அணி மகேந்திரன், முன்னாள் எம்பி நாகராஜ், வழக்கறிஞர்கள் ராஜீவ்காந்தி , கேஎம் தண்டபாணி, அருள்மொழி, கணேஷ்குமார், செந்தில்நாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img