நாம் படும் துன்பத்திற்கு காரணம் அறியாமையும் அலட்சியமுமே என்று கவிஞர் கவிதாசன் பேசினார். நுகர்வோரின் விழிப்புணர்வுக்காக துவங்கப்பட்ட கோவை சிட்டிசன் வாய்ஸ் கிளப் தனது நாற்பதாவது ஆண்டு விழாவை கொண்டாடியது.
தலைவர் சி.எம்.ஜெயராமன் தலைமை தாங்கினார். டிசிபி பேங்க் துணைத் தலைவர் மற்றும் ரீஜனல் ஹெட் சி.ஜெயசூர்யா முன்னிலை வகித்தார்.
சிவிசி ஒருங்கிணைப்பாளர் பி.சுப் பிரமணியன் தொகுத்து வழங்கினார்.
இன்காம்டாக்ஸ் கூடுதல் கமிஷனர் ஏ.ஸ்ரீனிவாசன் சிறப்புரையாற்றினார்.
கல்லூரி மாணவர்களுக்கான முன்மாதிரி வழக்காடு மன்றம் போட்டிகள் நடந்தன.
இதில் 18 கல்லூரிகளில் இருந்து 400 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர் முதல் பரிசு வென்ற சங்கரா கலை அறிவியல் கல்லூரி அணிக்கு ரூ. 10,000 மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன.
இரண்டாம் பரிசு வென்ற கோவை சட்டக்கல்லூரி அணிக்கு ரூ. 5,000, மூன்றாம் பரிசு வென்ற ஜான்ஸன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அணிக்கு ரூ. 3,000 ரூபாயும் விருதுகளும் வழங்கப்பட்டன. அனைத்து மாணவ, மாணவியருக்கும் ஆறுதல் பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர் சிந்தனை கவிஞர் கவிதாசன் பேசியதாவது :
பெரிதினும் பெரிது கேள் என்று பாரதியும் கனவு காணுங்கள் என்று அப்துல் கலாம், திருப்தி இல்லாத வாழ்க்கையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தரும் கூறியிருக்கின்றனர். எனவே நாமும் நாடும் முன்னேற வேண்டுமென்றால் அந்தந்த துறைகளில் ஆசைப்பட்டு முன்னேற வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறி இருந்தனர்.
நாம் படும் துன்பத்திற்கு காரணம் அறியாமையும் அலட்சியமுமே. அதனால் நாம் மட்டுமல்லாமல் நம்மைச் சார்ந்தவர்களையும் பாதிக்கிறது அறிவு வெற்றியாக வேண்டும் எனில் தகவல் அறிதல் வேண்டும். பின் அதனை சிந்திக்கும் அறிவு வேண்டும்.
அடுத்து அதனை செயல்படுத்தும் அறிவும் இருந்தால் தான் வெற்றியை எட்ட முடியும். உலக வரலாற்றில் இரண்டு பேர் இருப்பார்கள் ஒன்று வென்றவர். இரண்டு வீழ்ந்தவரும் இருப்பார். வேடிக்கை பார்த்தவர் எந்த வரலாற்றிலும் இருக்க மாட்டார்கள். அதனால் வெற்றியோ தோல்வியோ முதலில் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுக் கொள்ளுங்கள்.
17 வகையான கன்ஸ்யூமர் படிப்புகள்
17 வகையான கன்ஸ்யூமர் படிப்புகளை யுனெஸ்கோ அறிமுகப்படுத்தியுள்ளது அதில் நுகர்வோர் விழிப்புணர்வு படிப்பும் ஒன்று. அதனை கோவையில் அறிமுகப்படுத்த உள்ளோம். நீங்கள் ஒளி காட்டும் விளக்காக வழிகாட்டும் மனிதராக இருக்க வேண்டும்.
கடந்த கால புரட்சிகளில் நிலத்திலிருந்து தொழில் புரட்சி தகவல் புரட்சி என்று வளர்ந்து இன்று டிஜிட்டல் புரட்சியாக உருவெடுத்துள்ளது.
இதன்மூலம் நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவர்களாகிய நீங்கள் சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்புத்தூர் அமைப்புடன் இணைந்து கொள்ளுங்கள் என்றார். விவேகாலயா இன்டர்நேஷனல் பள்ளித் தாளாளர் பிரேமாராவ் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.



