கொரோனா வைரஸ் முதல் அலையில் இருந்த அதே தன்மையில் தற்போது இல்லை. பலவகையில் அது மாறிவிட்டது. இதுவரை சுமார் 10 முதல் 15 வகையான திரிபுகளாக தன்னை உருமாற்றிக்கொண்டுள்ளது.
அறிவியல்பூர்வமாக சொல்வதென்றால், ஆர்.என்.ஏ மற்றும் டி.என்.ஏ என்ற இரண்டு வகையாக வைரஸ் உள்ளது. கொரோனா ஆர்.என்.ஏ வைரஸ். இது தனது உருவை மாற்றிக்கொண்டே இருக்கும். இதனை கட்டுப்படுத்துவது சிரமம்தான்.
கொரோனா வைரஸ் முதல் அலையில் இருந்தபோது, அதனை முழுமையாகப் புரிந்துகொண்டு, அதனை எதிர்ப்பதற்கான தடுப்பூசி கண்டறியப்பட்டது. ஒரு வைரஸின் பேட்டர்ன்-ஐ (மாதிரி) கண்டறிவதற்குதான் அதிக காலம் தேவைப்படும். அதன் திரிபு வகையில் பெரிய மாற்றங்கள் இருக்காது.
தற்போது, உலகளவில் பல்வேறு தடுப்பூசி ஆய்வு நிறுவனங்கள் பல்வேறு விதமான கொரோனா திரிபுகளுக்கும் சேர்ந்த வகையில் ஒரே தடுப்பூசியை கண்டறியும் சோதனைகளை நடத்தி வருகின்றன. பல்வேறு நாடுகளிலும் தற்போது இந்த ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.
கொரோனா வைரஸ் என்பது, டெங்கு, சிக்குன் குனியா, பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை போல, எப்போதும் கவனமாக இருக்கவேண்டிய நோய்களின் பட்டியலில் வந்துவிட்டது. முழுமையான தடுப்பு மருந்து வரும்வரை தற்காப்பு என்பதுதான் ஒரே வழி.
தடுப்பூசிகள் மூலம் நம்மை தற்காத்துக்கொள்வது என்பதை தற்போது இரண்டாவது வாய்ப்பாகதான் நாம் கருதவேண்டும். முதல் வாய்ப்பு என்பது நம்மை நாம் தற்காத்துக் கொள்வதுதான் சிறந்தது.
தடுப்பூசி கண்டறிந்து, அதனை நாம் போட்டுக்கொள்வதற்கு ஒரு காலம் தேவைப்படும். ஆனால் அந்த காலத்தை விட குறுகிய காலத்தில் கொரோனா வைரஸ் தனது அடுத்த திரிபு நிலைக்கு செல்வதற்கு வாய்ப்பு உள்ளது.
அதனால், தடுப்பூசியை மட்டுமே வாய்ப்பாக நாம் கருதுவதைவிட, நம்மை தற்காத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது என்பதை முதன்மையாகக் கருதவேண்டும்.
மீண்டும் கொரோனா வருகிறது என அபாய சங்கு ஊதப்பட்டு விட்டது.
அரசாங்கம் அறிவிப்பு கொடுக்கும்வரை காத்திருக்காமல், நாமாகவே கூட்டநெரிசலான இடங்களை தவிர்க்கலாம். முகக்கவசம் அணிவதை ஒரு பழக்கமாக வைத்துக்கொள்ளலாம்.
இது ஒன்றும் நமக்கு புதியது அல்லவே. மீண்டும் முக கவசம் அணிவோம்; சமூக இடைவெளி பேணுவோம். கொரோனா ஊரடங்கைத் தவிர்ப்போம்!



