fbpx
Homeதலையங்கம்இடிந்த பீகார் பாலங்கள் உணர்த்தும் பாடம்!

இடிந்த பீகார் பாலங்கள் உணர்த்தும் பாடம்!

பீகார் மாநிலத்தில் சமீப நாட்களாக பாலங்கள் இடிந்து விழுவது தொடர்கதையாகி வருகிறது. இதுவரை கடந்த ஜூன் 18 முதல் அம்மாநிலத்தின் கிஷன்கஞ்ச், அராரியா, கிழக்கு சம்பரான், மதுபானி மற்றும் சரண் ஆகிய பகுதிகளில் இதுவரை 10 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன.

நேற்று முன்தினம் சரண் மாவட்டத்தில் 150 ஆண்டுகள் பழமையான ஒரு பாலம் இடிந்து விழுந்த நிலையில், தற்போது அதே மாவட்டத்தில் கண்டகி ஆற்றின் குறுக்கே 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி நேற்று இடிந்து விழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தொடர் சம்பவங்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அதோடு இடிந்த பாலங்களின் தரம் மீதான கேள்விகள் வலுவாக எழுப்பப்படுகிறது.

தொடர்சியாக பாலம் இடிந்து விழுந்த விபத்துகள் தொடர்பாக மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பீகார் மாநிலம் முழுவதும் புதியதாக கட்டப்பட்டு வரும் பாலங்களின் தரம் மற்றும் தற்போதைய கட்டுமான நிலைப்பாடு, அதே போல, பழைய பாலங்களின் தரம் ஆகியவற்றை ஆய்வு செய்து அதனை அறிக்கையாக சமர்ப்பிக்க ஒரு உயர்மட்டக் குழுவை நியமித்துள்ளார். தரமற்ற கட்டுமானப் பொருள்களால் ஆன தரமற்ற கட்டுமானம், பராமரிப்பின்மை உள்ளிட்ட காரணங்களால் பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் நிகழ்வதாக மக்கள் அந்த மாநிலத்தின் பொதுப் பணித்துறை மீது கடுமையாக குற்றம் சாட்டுகின்றனர்.

பீகாரில் பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் அம்மாநிலத்திற்கு மட்டுமின்றி மற்ற மாநிலங்களுக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும். நாடு முழுவதும் தற்போது கட்டப்பட்டு வரும் பாலங்கள், இனி கட்டப்போகும் பாலங்கள் மட்டுமின்றி அரசு சார்பில் கட்டப்படும் அனைத்து கட்டிடங்களும் வலுவாக இருக்கும் வகையில் அதிதீவிர நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட வேண்டும் என்பதைத் தான் பீகார் சம்பவங்கள் உணர்த்துகின்றன.
முன்னெச்சரிக்கை மிகமிக அவசியம்!

படிக்க வேண்டும்

spot_img