fbpx
Homeபிற செய்திகள்புலம்பெயர்ந்தோர்க்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்

புலம்பெயர்ந்தோர்க்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர்  கிராந்திகுமார் பாடி கூறியிருப்பதாவது:
தமிழக அரசு கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டில் வேலையிழந்து தமிழகம் திரும்பிய புலம்பெயர்ந்தோருக்கு 25 சதவீத மானியத்துடன் தொழில் தொடங்க ஏதுவாக “புலம்பெயர்ந்தோர்க்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்” என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


இத்திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்து கொரோனா தொற்று பரவலால் வேலையிழந்து தமிழகம் திரும்பிய தமிழர்கள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் இணைந்த கடனுதவி பெற்று பயன்பெறலாம்.கொரோனா பரவலினால் 2020 ஜனவரி 1 அன்று அல்லது அதற்கு பிந்தைய நாட்களில் தமிழகம் திரும்பியவர்கள், வியாபாரம் மற்றும் சேவை சார்ந்த தொழில்களை அதிகபட்சம் ரூ.5 லட்சம் திட்ட மதிப்பீட்டிலும், உற்பத்தி சார்ந்த தொழில்களை அதிகபட்சம் ரூ.15 லட்சம் திட்ட மதிப்பீட்டிலும் துவங்கலாம். 


இத்திட்டத்தில் பயன்பெற குறைந்த பட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். வயது வரம்பு பொது பிரிவினருக்கு 18 முதல் 45 வரையிலும், இதர பிரிவினருக்கு 18 முதல் 55 வரையிலும் இருக்க வேண்டும்.சொந்த முதலீடாக பொது பிரிவினர் திட்டத் தொகையில் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினர் 5 சதவீதமும் செலுத்த வேண்டும். இத்திட்டத்தின் கீழ் துவங்கப்படும் தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அதிகபட்சம் ரூ.2.50 லட்சம் மானியம் வழங்கப்படும்.
இம்மானியத் தொகை 3 ஆண்டுகளுக்கு வங்கியில் வைப்புநிதியாக வைக்கப்பட்டு பின் கடனுக்கு சரிகட்டப்படும். இத்திட்டமானது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் மூலம் மாவட்ட தொழில் மையம் வாயிலாக செயல்படுத்தபடுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in என்ற தளத்தில் இணையவழியாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கோவை – 641001 என்ற முகவரியை நேரடியாகவோ அல்லது 0422-2391678, 2397311 என்ற எண்ணிலோ அணுகலாம். 
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img