ரக்பி பிரிமியர் லீக் (RPL) தொடக்க சீசனில் பங்கேற்கும் சென்னை புல்ஸ் அணி, ரசிகர்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வில், அணியின் புதிய ஜெர்சி, அணிக்கான பாடல் வெளியிடப்பட்டு, செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த நிகழ்ச்சி சென்னையின் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பில் நடைபெற்றது.
இந்த விழாவில் ரக்பி இந்தியாவின் பொருளாளராக உள்ள செந்தில் வி. தியாகராஜன், இந்திய பேஸ்கட் பால் சங்கத் தலைவர் மற்றும் தமிழக ஒலிம்பிக் சங்க பொதுச்செயலாளராக உள்ள ஆதவ் அர்ஜூனா, சென்னை புல்ஸ் நிர்வாகத்திலுள்ள அக்ஷித் சர்மா, அணியின் பயிற்சியாளர் பென் காலிங்ஸ் மற்றும் நடிகரும் முன்னாள் ரக்பி வீரருமான வினய் ராய் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து அக்ஷித் சர்மா பேசுகையில், “சென்னை புல்ஸ் ஒரு அணி மட்டும் அல்ல இந்திய விளையாட்டு உலகத்தை மாற்ற ஒரு முயற்சி.
சிறந்த பயிற்சி, வளங்கள், மற்றும் ரசிகர்களுடன் நெருக்கம் உருவாக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்“ என்றார்.
செந்தில் வி.தியாகராஜன் பேசுகையில், “இந்தியாவிலும் ரக்பிக்கு ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்கள். ஆர்.பி.எல் லீக் மூலம் இன்னும் பலர் ரக்பியை அறிந்து விரும்புவார்கள். சென்னை புல்ஸ் நிச்சயமாக இளைஞர்களை ஊக்குவிக்கும்“ என்றார்.”
ஆதவ் அர்ஜூனா, இந்த லீக் மூலம் இந்திய வீரர்கள் அதிக போட்டி அனுபவம் பெறுவார்கள். இது ஒலிம்பிக்கில் வெற்றி பெறுவதற்கான ஒரு நல்ல படியாக இருக்கும் என்றார்.
வினய் ராய், ரக்பி என்பது குழு விளையாட்டு, அனைவரும் ஒற்றுமையாக விளையாட வேண்டும். அதற்கான உற்சாகம் இந்த லீக்கில் தெரிகிறது” என பேசினார்.
RPL லீக், உலகில் முதன்முறையாக ஃபிராஞ்சைஸி முறைப்படி நடைபெறும் ரக்பி 7ஸ் லீக். இது ஜூன் 15 முதல் 29 வரை மும்பை அந்தேரி ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்ஸில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் மொத்தமாக 6 அணிகள் பங்கேற்கின்றன.