மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் பன்னாட்டு அமைப்பின் பொதுச் செயலாளர் மிலின்ஞ்சி பரண்டே தெரிவித்தார்.
ஈரோட்டில் குந்துநாத் ஜெயின் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விஷ்வ ஹிந்து பரிஷத் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
இன்று ஜன்மாஷ்டமி தினம் மட்டுமல்லாமல், விஷ்வ ஹிந்து பரிஷத் உருவாக்கப்பட்ட தினமும் ஆகும். இதையொட்டி அமைப்பின் செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்தவும், வலுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
வரும் நாட்களில் 2 லட்சம் கிராமங்களுக்குச் சென்று, சுமார் ஒரு கோடி உறுப்பினர்களை விஷ்வ ஹிந்து பரிஷத்தில் இணைக்கத் திட்டமிட்டுள்ளோம். ராமஜென்மபூமி போராட்டத்தை முன்னெடுத்த விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்காலின் 100-ஆவது பிறந்தநாள் செப்டம்பர் 27-ஆம் தேதி நாடு முழுவதும் பெரிய அளவில் கொண்டாடப்படும்.
நாட்டில் ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதா கவும், மதமாற்றம் நடைபெறு வதாகவும் அவர் தெரிவித்தார். ஏற்கெனவே 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பல்வேறு வகைகளில் மதமாற்றத்துக்கு எதிரான சட்டங்கள் உள்ளன. மதப் பிரசாரத்துக்கு அரசமைப்புச் சட்டம் அனுமதி அளித்தாலும், மதமாற்றத்தை ஆதரிக்கவில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எனவே, தமிழக அரசும் மதமாற்றத்துக்கு எதிரான சட்டத்தை கொண்டுவர வேண்டும். தமிழகத்தில் மதமாற்ற நடவடிக் கைகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இதைத் தடுக்க உரிய சட்ட நடவடிக்கை தேவை.
ஹிந்துக்களின் மக்கள் தொகை குறைந்து வருவதால், ஹிந்து குடும்பங்கள் குறைந்தபட்சம் 2 அல்லது 3 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஹிந்து சமூகத்தைப் பாதுகாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கத் தயாராக உள்ளோம். இந்து மதத்தைப் பொருத்தவரை தீண்டாமை கூடாது என்பதே தர்மமாகும். எனவே ஜாதி கட்டமைப்புக்கு உட்படாமல் இந்துக்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து கிறிஸ்தவ மிஷனரி அமைப்புகளுக்கு பல்வேறு வழிகளில் நிதி வருவதாகவும், கடந்த ஆண்டு மட்டும் சுமார் ரூ.18,000 கோடி வந்துள்ளதாகவும் அவர் கூறினார். அதை அவர்கள் மதமாற்றம் போன்ற தவறான செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர்.
அந்த நிதி தொடர்பாக உரிய கண்காணிப்பு இருக்க வேண்டும். வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்து, அதை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
ராமஜென்மபூமி கோயில் தொடர்பாக முறைகேடுகள் நடைபெற்றதாக தவறான பிரசாரம் செய்யப்படுகிறது. ராமர் கோயிலுக்கு வழங்கப்பட்ட 2,900-க்கும் மேற்பட்ட மதிப்புமிக்க பொருள்கள் பாதுகாப்பாக உள்ளன. அவை முறையாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கோயில் அறக்கட்டளை மீது இதுவரை எந்தப் புகாரும் இல்லை.
ஆனால், கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடையை சில ஊழியர்கள் முறைகேடாக எடுத்துக்கொண்டதாகப் புகார் எழுந்துள்ளது. அவர்களுக்கும் அறக்கட்டளைக்கும் சம்பந்தமில்லை. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில் பரிஷத் மத்திய குழு உறுப்பினர் பிரதீப் ஜேத்தியா ஈரோடு குந்துநாத் ஜெயின் சங்க தலைவர் பிரகாஷ் ஜெயின், ஜெயின் இன்டர்நேஷனல் ட்ரேடு ஆர்கனைசேஷன் ஈரோடு செயலாளர் விபுல் சந்தாலியா ஈரோடு அனைத்து வணிக தொழில் கூட்டமைப்பு தலைவர் வி.கே. ராஜமாணிக்கம், ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் நிலமீட்பு இயக்கத் தலைவர் சந்திரசேகர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.



