திருச்செந்தூர் அருகே மெஞ்ஞானபுரம் சோலை குடியிருப்பு அருள்மிகு ஸ்ரீ நாகமணி சுடலை மாட சுவாமி கோயில் ஆடி கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்லை பந்தயம் இன்று நடைபெற்றது. சத்யா நகரில் இருந்து காலை 6 மணிக்கு தொடங்கிய போட்டியில் நாட்டு மாடு பிரிவில் 8 வண்டிகளும், சின்ன மாடு பிரிவில் 13 வண்டிகளும் கலந்து கொண்டன.
போட்டியை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமராஜா, தமிழ்நாடு முன்னாள் ரேக்ளா ரேஸ் மாநில தலைவர் மோகன் சாமி குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சோலை குடியிருப்பு சத்யா நகரில் இருந்து தொடங்கிய பந்தயம் நாசரேத் தைலாபுரம் விளக்கு வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் நடத்தப்பட்டது. இதில் நாட்டு மாடு பிரிவில் மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவரின் வண்டி முதலிடம் பிடித்தது.
நாட்டு மாடு பிரிவில் முதல் பரிசாக 40 ஆயிரத்து 1 ரூபாயை நங்கை மொழி ஊராட்சி மன்ற தலைவர் விஜயராஜ், மெஞ்ஞானபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கிருபா ராஜா பிரபு ஆகியோர் வழங்கினர்.
இரண்டாவது பரிசாக 30 ஆயிரத்து 1 ரூபாயை மெஞ்ஞானபுரம் அருணாச்சலம் யாதவ், முத்து சாமியாபுரம் காசிநாதன் யாதவ் ஆகியோரும், 3வது பரிசாக 20,001 ரூபாயை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி செயலாளர் கவாஸ்கர், செம்மறிகுளம் ரவி நாடார் ,4வது பரிசாக பத்தாயிரத்து ஒரு ரூபாயை திருப்பாற்கடல் மானாடு தேவர் ஆகியோர் வழங்கினர். இதேபோல் சின்ன மாடு பிரிவில் முதல் பரிசாக 20001 ரூபாயை வழக்கறிஞர் ரகு ராமையா, இரண்டாவது பரிசாக 15 ஆயிரத்து1 ரூபாயை அதிமுக மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் அமிர்தா மகேந்திரன், மூன்றாவது பரிசாக பத்தாயிரத்து ஒரு ரூபாயை செம்மறி குளம் ஊராட்சி மன்ற தலைவர் அகஸ்டா நோவா, 4வது பரிசாக 70001 ரூபாயை மகாராஜா நடைமேடை உரிமையாளர் ஆகியோர் வழங்கினர்.
நிகழ்ச்சியில் சாத்தான் குளம் டிஎஸ்பி கென்னடி, அதிமுக அம்மா பேரவை மாவட்ட செயலாளர் விஜயகுமார்,இணைச் செயலாளர் அமிர்தா எஸ் மகேந்திரன், உடன்குடி நகர அதிமுக செயலாளர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் செல்வின், பண்ணம்பாறை பஞ்சாயத்து தலைவர் அழகேசன், திமுக இளைஞரணி விஎஸ். முத்துக்குமார் , தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் கவாஸ்கர், துணைத் தலைவர் முரளிகுமார், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி தொகுதி ஒருங்கிணைப்பாளர் ராஜா பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.