தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து அறிவிப்போம் என்றும் பாஜகவுடன் 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிவந்தார்.
இந்தச்சூழலில் தான், அதிமுகவின் அனைத்து பிரிவுகளும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்; அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்கிற குரல்கள், இரு கோரிக்கைகளாக அக்கட்சியில் வலுத்து வந்தன.
ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுகவில் சேர்க்கவே முடியாது என திட்டவட்டமாக கூறி முதல் கோரிக்கையை நிராகரித்துவிட்டார். அதேநேரத்தில் பாஜகவுடனான கூட்டணிக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவந்த எடப்பாடி பழனிசாமியின் குரலில் அண்மையில் மாற்றம் தென்பட்டது.
திமுகதான் எதிரி; இதர கட்சிகள் அனைத்தும் எதிரி அல்ல; திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறக்கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம்
என கூறினார். இது இரண்டாவது கோரிக்கைக்கு பச்சைக்கொடி காட்டுவது போல இருந்தது. இதனால் அதிமுக, மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கக் கூடும் என தகவல்கள் பரவின.
இந்த நிலையில் தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கே.பி.முனுசாமி, எம்.பிக்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ ஆகியோர் நேற்று டெல்லி சென்றனர். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினர்.
எடப்பாடி பழனிசாமியும் அமித்ஷாவும் தனியாகவும் ஆலோசனை நடத்தினர். இரவு 9 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை 10.30 மணி வரை நீடித்தது. இது பாஜக தலைமையிலான கூட்டணியில் அதிமுக மீண்டும் இடம் பெறுவதை உறுதிப்படுத்தி உள்ளது.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தமது சமூக வலைதளப் பக்கத்தில், 2026-ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்
என பதிவிட்டு கூட்டணியை உறுதிப்படுத்தினார். அமித்ஷாவை மட்டுமல்லாமல், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவையும் எடப்பாடி தலைமையிலான அதிமுக தலைவர்கள் குழு நேற்று டெல்லியில் சந்தித்தது.
பாஜகவுடன் ஒட்டுமில்லை, உறவுமில்லை என்று ஆவேசமாகக் கூறி வந்த எடப்பாடி பழனிசாமி, திடீரென டெல்லிக்குப் போய் பாஜகவிடம் சரணாகதி அடைந்திருப்பது அதிமுகவினரை மட்டும் பரபரப்புக்குள்ளாக்கவில்லை; ஒட்டுமொத்த தமிழகத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
நேற்று மதியம் வரை யாரையும் சந்திக்கப்போவதில்லை என்று கூறியவர், மாலையிலேயே அமித் ஷாவை சந்தித்துள்ளார். சொல்லொன்று, செயலொன்று
என்பதற்கு இலக்கணமாகவே மாறி விட்டார், எடப்பாடி பழனிசாமி.
கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி பணிய வைக்கப்பட்டாரா? என்று கேள்வியும் எழுந்து விவாதப்பொருளாக மாறி இருக்கிறது.
எது எப்படியோ, 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே அதிமுக மீண்டும் திரும்புவது உறுதியாகி விட்டது. தமிழக தேர்தல் களம் இப்போதே சூடாகி விட்டது!