இயேசு இந்த உலகில் பிறந்த போது பலதரப்பட்ட தலைவர்கள், மக்கள் அவரது வருகையை வரவேற்றார்கள். மத்தேயு 2ல் 4 விதமான கூட்டத்தாரை பார்க்கிறோம். இன்னும் உலகில் பலதரப்பட்ட மக்கள் வித்தியாசமான வரவேற்புகளை அளிக்கிறார்கள்.
அக்கறையற்ற வேதபாரகரின் வரவேற்பு. ஏரோது ராஜா வேதபாரகர் பிரதான ஆசாரியர்களிடம் யூதருக்கு ராஜாவாக பிறக்கிறவர் எங்கே பிறப்பார்? என்று விசாரித்தான். வேதபாரகர், பிரதான ஆசாரியர் எருசலேமிலும் தேவாலயத்திலும் வாழ்ந்தவர்கள். யூத மார்க்கத்தின் தலைவர்கள். வேதத்தை ஆராய்ந்து பார்க்கிறவர்கள்.
பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசன வசனத்தை வியாக்கியானம் செய்கிறவர்கள், போதிக்கிறவர்கள். மேசியா எங்கே பிறப்பார் என்ற கேள்விக்கு உடனடியாக பதிலளித்தனர். அவர்கள் வேதத்தை ஆராய வேண்டிய அவசியம் இல்லை ஏனென்றால் அவர்கள் வேதவசனங்களை மனப்பாடமாக அறிந்திருந்தனர்.
அவர்கள் எருசலேமில் வாழ்ந்திருந்தாலும் வேத வசனம் தெளிவாக மேசியா எங்கே பிறப்பார் என்று அறிந்திருந்தாலும், அதைக் குறித்து அவர்கள் எதுவும் செய்யவில்லை. அக்கறை கொள்ளவில்லை. பெத்லகேம் எருசலேமில் இருந்து ஐந்து மைல் தூரம். பெத்லகேமிற்கு போய் மேசியாவை பார்க்க அவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
அவர்களோ, இயேசு பிறந்திருக்கிறார், அதை நாங்கள் அறிவோம், ஆனால் எங்களுக்கு இயேசுவின் பிறப்பை பார்க்க நேரமில்லை. ஆராதிக்க நேரமில்லை. நாங்கள் யார் தெரியுமா? என்ற மனநிலையோடு இருந்தனர். ஆகவேதான் இயேசு “வேதபாரகரே, மாயக்காரரே, உங்களுக்கு ஐயோ! மற்றவர்களுக்கு வழிகாட்டுகிறீர்கள், ஆனால் நீங்களோ அந்த வழியில் நடப்பதில்லை” என்றார்.
இரண்டாவதாக கலக்கமடைந்த ஏரோது ராஜாவின் வரவேற்பு (மத்தேயு 2:1-3: 16,17): வான சாஸ்திரிகள் பாலகனாகிய இயேசுவை தேடி ஏரோது ராஜாவின் அரண்மனைக்குள் விசாரிக்க வந்தார்கள். சாஸ்திரிகள் யூதருக்கு ராஜாவாக பிறந்திருக்கிறவர் எங்கே என்று கேட்ட கேள்வி அவனை கலக்கப்பண்ணினது. அவனை மட்டுமல்ல எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்.
ஏரோது ராஜா கொடூரமான ராஜா, பொறாமை, சந்தேகம், சொந்த மனைவி, இரண்டு பிள்ளைகள் என அநேகம் யூதரை கொலை செய்தவன். தனக்கு போட்டியாக யூதருக்கு ஒரு ராஜா பிறந்திருக்கிறார் என்பதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நயவஞ்சகமாக சாஸ்திரிகளிடம் வேதபாரகரிடம் விசாரித்து பெத்லகேமில் உள்ள இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொன்று குவித்தான்.
மூன்றாவது கூட்டத்தார் – வான சாஸ்திரத்து ஞானிகள் மத்தேயு 2:9-11 தேடி வந்த ஞானிகளின் வரவேற்பு: மூன்றாவது கூட்டத்தார் கிழக்கிலிருந்து இயேசுவை தேடி வந்த சாஸ்திரிகள்.
இவர்களை ஞானிகள். விஞ்ஞானிகள். சாஸ்திரிகள் என்று கூறுவர். இவர்கள் யார்? இவர்கள் பல ஆயிரம் மைல்கள் பிரயாணம் செய்து ராஜாவை தேடி எருசலேம் நகரத்திற்கு தங்களுக்கு ஒரு ராஜா பிறந்திருக்கிறார் என்று அறிவித்த ஒரு நட்சத்திரம், அது விண்வெளியில் தோன்றின வித்தியாசமான நட்சத்திரம், விசேஷித்த நட்சத்திரம், பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் பின்பற்றி வந்தார்கள்.
ஞானிகளின் உள்ளத்தில் இந்த ராஜாவை பார்க்க வேண்டும் என்ற ஒரு வாஞ்சை இருந்தது. அவரைக் காண வாஞ்சித்தார்கள். அதற்காக விலை கிரயம் செலுத்தி எவ்வளவு தூரமானாலும் தேடி ஓடி வந்தார்கள். நம்ம ஊருக்கு வரட்டும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லவில்லை. அவர்கள் ஞானிகள், விஞ்ஞானிகள், ஒளியை தேடி, ராஜாவை தேடி அவரை காண வாஞ்சையோடு வந்தார்கள்.
இன்றைக்கும் மனிதனின் உள்ளத்தில் ஒரு வெற்றிடம் காணப்படுகிறது. அவன் ஒளியை தேடுகிறான். இறைவனை தேடுகிறான், இறைவா நீ எங்கே? பல சமயங்களில் தவறான இடங்களில் தேடுகிறான். ஏரோதுவின் மாளிகையில், இயேசு அரண்மனையில் இல்லை. பெத்லகேமில் – வீட்டில் இருந்தார்.
இன்றும் பலர் இயேசுவை தேடுகிறார்கள். அவர்களை இயேசுவிடம் வழிநடத்த நட்சத்திரம் தேவை. நட்சத்திரத்தை கண்டபோது அங்கே ஆனந்த சந்தோஷம் உண்டாயிற்று. அந்த நட்சத்திரம் சாஸ்திரிகளையும் நேர் வழியாய் நடத்தியது. நேராக இயேசுவிடம் நடத்தினது.
இயேசு பாலகனாக இருந்தாலும் அவர் யார் என்கிற வெளிப்பாட்டைப் பெற்ற சாஸ்திரிகள் சாஷ்டாங்கமாக விழுந்து பணிந்து கொண்டார்கள். தங்கள் விலையேறபெற்ற பொன், வெள்ளைப்போளம், தூபவர்க்கம் ஆகியவற்றை காணிக்கையாக படைத்து ஆராதித்தார்கள்.
ஏரோதுவிற்கு பயப்படவில்லை. தேவ தூதர்களால் வழிநடத்தப்பட்டு வேறு வழியாய் தங்கள் தேசத்திற்கு கடந்து சென்றார்கள். மிகுந்த சந்தோஷம், ஆனந்த சந்தோஷம் பெற்றார்கள்.
நற்செய்தியை பிரசித்தம் செய்த மேய்ப்பர்களின் வரவேற்பு (லூக்கா 2:15-18) தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி, தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்.
கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம் பண்ணினார்கள். மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
இயேசுவின் பிறப்பை வரவேற்ற நான்காவது கூட்டத்தார் மேய்ப்பர்கள். இராக்காலத்தில் மேய்ப்பர்கள் பெத்லகேம் வயல்வெளியில் மந்தையை காத்துக் கொண்டிருந்தபோது, தேவதூதர்கள் இந்த நற்செய்தியை அவர்களுக்கு அறிவித்தார்கள். தேவ தூதர்கள் இயேசுவின் பிறப்பில் ஐந்து முறை காணப்பட்டார்கள். ஆனால் விசேஷமாக மேய்ப்பர்களுக்கு தரிசனமானார்கள்.
இந்த மேய்ப்பர்கள் யார்? சுகாதாரணமான, அற்பமாய் எண்ணப்பட்டவர்கள், படிப்பறிவில்லாதவர்கள், பேதைகள், ஏழைகள். இவர்களைத் தேடி தேவன் தூதர்களை அனுப்பி கூறின நற்செய்தியில் 3 காரியங்களை கூறினார் – மிகுந்த சந்தோஷம், பூமியிலே சமாதானம், மனுஷர் மேல் பிரியம்.
இதைக் கேள்விப்பட்ட மேய்ப்பர்கள் (வ15-16) “தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி, நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி,..” தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்.
மேலும் வ17 கூறுகிறது, “அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள். ஏன் தேவதூதர்கள் மேய்ப்பர்களுக்கு அறிவித்தனர் என்றால் அவர்கள் உடனே யாவருக்கும் அறிவித்தார்கள்.
பெத்லகேமில் பிறந்த இயேசுவைக் குறித்த செய்தியை கேட்கிற நீங்கள் அவரை உங்கள் உள்ளத்தில் ஏற்றுக்கொள்வீர்களானால் இன்று முதல் நீங்கள் தேவகுமாரன், குமாரத்தியாக இருப்பீர்கள். பாவம், சாபம், இருளின் ராஜ்யத்தில் இருந்து விடுதலையாகி அன்பின் குமாரனின் ராஜ்யத்திற்கு உட்படுத்தப்பட்டிருப்பீர்கள்.
இந்த கிறிஸ்துமஸ் நாளில் சாஸ்திரிகளைப் போலவும் மேய்ப்பர்களைப் போலவும் இயேசுவை வரவேற்கிறவர்களாக இருந்து அவருடைய அன்பின் நற்செய்தியினால் உண்டாகும் மிகுந்த சந்தோஷமும் சமாதானமும் பிரியமும் உண்டாயிருக்கப் பெறுவோம்!



