அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் நேற்று (மார்ச் 24) விளக் கேற்றும் விழா நடந்தது. கலாசாரத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விதமாகவும், மாணவிகள் அஞ்ஞான இருளிலிருந்து மெய்ஞான வெளிச்சத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆண்டு தோறும் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இசைத்துறை உதவிப் பேராசிரியர் ஜே.ஆர்.பிந்து இறைவணக்கம் பாடினார்.
கலை மற்றும் சமூக அறிவியல் புல முதன்மை பேராசிரியர் எம்.மனோன்மணி வரவேற் றார். ஸ்ரீஅவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் முனைவர் தி.ச.க.மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கி பேசியதாவது: எண்ணங்களை உயர்வாகக் கொண்டு விடா முயற்சியோடு உழைப்பீர்களானால் எதையும் எதிர்கொண்டு வெற்றி பெறலாம். சுட ரொளி தீபங்கள் போல உங்கள் வாழ்வு ஒளிவீசி மேன்மையுற வேண்டும் என்றார்.
அறக்கட்டளை
தடாகம் ஆர்ஷ வித்யா குருகுலம், ஸ்ரீலலிதாம்பிகை ஆலய அறக்கட்டளை நிறுவனர் முனைவர் ஜகதாத்மானந்த சரஸ்வதி சுவாமிஜி தாய் விளக்கை ஏற்றி சிறப்பித்தார். அவரைத் தொடர்ந்து இறுதியாண்டு பயிலும் இளநிலை மற்றும் முது நிலை மாணவிகள், தொழில்நுட்பக் கல்வி, ஆசிரியர் பயிற்சிக் கல்வி மற்றும் முனைவர்பட்ட மாணவிகள் மொத்தம் 2,610 பேர் விளக்கேற்றினர். மாணவிகளுடன் பேராசிரியர்களும் விளக்கேற்றினர்.
வேந்தர் டாக்டர் ச.ப.தியாகராஜன் உறுதி மொழியை வாசிக்க, மாண விகள் தீபம் ஏந்தி உறுதி எடுத்துக் கொண்டனர். ஜகதாத்மானந்த சரஸ்வதி சுவாமிஜி பேசி யதாவது: உங்களை உருவாக்கிய பெற்றோர்களுக்கும், இந் நிலைக்கு உயர்த்திய ஆசிரியர்களுக்கும் முதலில் நன்றி தெரிவிக்க வேண்டும்.
கல்வி சித்தியாக இருக்க வேண்டும் என்றால், இறைவனின் அருள் வேண்டும். இறைவனின் அருள் இருப்பதால்தான், இந்த அளவுக்கு உயர்ந்துள்ளீர்கள். வேற்றுமை நிறைந்த உலகில் ஒற்றுமை காண வேண்டும்.
நாம் கற்கும் கல்வி பொருள் சார்ந்த கல்வியாக இருக்கிறது. ஆனால் அருள் சார்ந்த கல்வியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ச.பிரியதர்சினி நன்றி கூறினார். பதிவாளர் கவுசல்யா, டீன் மனோன் மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



