சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கடலூரில் அரசு அலுவலர்களுக்கு பணிகள் ஒதுக்கீடு செய்து தேர்தல் சீரான முறையில் நடைபெற ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு பொறுப்பு அலுவலர்களை நியமிப்பது மற்றும் அவர்களுக்கான பணிகளை ஒதுக்கீடு செய்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந் தது. கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும். கலெக்ட ருமான சிபி ஆதித்ய செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:
-இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்ட வருவாய் அலுவலர், தேர்தல் பணியாற்றுவதற்கான அலுவலர்கள், பணியாளர்களை கண்டறிந்து பட்டியலிட்டு பணிகளை ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும். தேர்தல் நடத்துவதற்கு தேவையான வாக்குப்பதிவு எந்திரங்களை கணினி முறையில் ஒதுக்கீடு செய்த பிறகு சம்மந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கும், வாக்குச் சாவடிகளுக்கும் அனுப்பும் பணியை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (என்.எல்.சி.நிலஎடுப்பு) மேற்கொள்ள வேண்டும்.
வாக்குப்பதிவு எந்திரங்களை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் இருந்து சட்டமன்ற தொகுதிகளுக்கும், அங்கிருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் கொண்டு செல்வதற்கு தேவையான வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். தேர்தலின் போது அலுவலர்கள் பணியாற்ற தேவையான பயிற்சி வகுப்பு களை உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மேற்கொள்ள வேண்டும். வாக்குச்சாவடி மையங்களிலும், பயிற்சியின் போதும் அலுவலர்களுக்கு பயன் படுத்துவதற்கு தேவையான விண்ணப்பங்கள். உபகரணங்கள், பேனா, பென்சில், அடையாள மை போன்றவற்றின் தேவை அளவை கண்டறிந்து மாநில அலுவலகத்தில் இருந்து பெற்று சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் மேற்கொள்ள வேண்டும்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததும்,அதை முறையாக அனைத்து இடங்களிலும் கடைபிடிக்கப்படுவதை கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) உறுதிப்படுத்த வேண்டும். அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் தேர்தலின்போது மேற்கொள்ளும் செலவினங்களை கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) கண்காணிக்க வேண்டும்.
சட்டம் ஒழுங்கை பராமரித்தல், தேர்தல் பார்வையாளர்களுக்கான உதவியாளர் ஒதுக்கீடு, வாக்குப்பதிவின் போது பயன் படுத்தப்படும் வாக்குச்சீட்டு, தபால்வாக்கு சீட்டு போன்றவற்றை அச்சிடுதல், வேட்பாளர்கள் வெளியிடும் விளம்பரங்கள், தேர்தல் விதிமீறல்களை கண்டறிதல், தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைத்தல்,100 சதவீத வாக் குப்பதிவை உறுதிசெய்ய விழிப்புணர்வு ஏற்பாடு செய்தி செய்தல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் வாக்குப்பதிவு செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கை மேற்கொண்டு தேர்தல் சீரான முறையில் நடைபெற ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (என்.எல்.சி.) சிவருத்ரய்யா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திருநாவுக்கரசு, அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைப்பதிவாளர் ஜெகதீஸ்வரன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



