கோவை சௌரிபாளையம் அன்னை வேளாங்கண்ணி மெட் ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியை சிறுவன் சாட்விக் ஆண்டர்சன் கேக் வெட்டி துவங்கி வைத்தார்.
பள்ளியின் முதல்வர் டாக்டர் மெர்சி விக்டர் ஆசிரியர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஆசிரியர் பணியின் சிறப்பு குறித்து வரவேற்புரை வழங்கினார். அடுத் ததாக சர்வப்பள்ளி டாக்டர். ராதாகிருஷ்ணனின் ஆசிரியர் பணி குறித்த சிறப்புரையை பள்ளியின் செயலாளர் விவின் ஆண்ட்ரூஸ் வழங்கினார்.
பள்ளியின் 25 ஆண்டு கால வளர்ச்சி மற்றும் வரலாற்றினை சான்றுபடுத்தும் வெள்ளிவிழா மலர் அச்சுப்பிரதியாகவும், கையெழுத்துப் பிரதியாகவும் வெளியிடப்பட்டது.
இம்மலரின் அச்சுப்பிரதி இக்கால தொழில்நுட்ப வசதி களுக்கு ஏற்ற வகையில் பல பக்கங்கள் கியூஆர் கோடுடன் கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் இந்நூல் முழுவதும் மின்னூலாக அலைபேசியிலும் கணினியிலும் காணும் வகையில் கியூஆர் கோடு வடிவில் வெளியிடப்பட்டது.
வெள்ளிவிழா மலரின் கையெழுத்துப் பிரதி பள்ளியின் மொழித்துறை ஆசிரியர்கள் சார்பாக மாணவர்களின் எழில்மிகு ஓவியங்கள் மற்றும் நேர்த்தியான கையெழுத்துடன் உருவாக்கப்பட்டிருந்தது. இதுவும் மின்னூல் வடிவில் வெளி யிடப்பட்டது.
இப்பள்ளியின் முன்னாள் மாணவி மற்றும் இளம் எழுத்தாளர் வி.வினி ஜோனா அவர்கள் எழுதிய உலகம் காணாத ஊரடங்கு 2019…? என்ற புதினத்தின் ஒலி வடிவம் வெளியிடப்பட்டது.
இவற்றை பள்ளியின் முதல்வர் டாக்டர். மெர்சி விக்டர் வெளியிட, கோவை மாவட்ட அரிமா சங்க முதல் நிலை துணை ஆளுநர் 324 டி டாக்டர். சண்முகசுந்தரம் மற்றும் அவரது துணைவியார் சித்ரா சண்முகசுந்தரம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இவர்களுடன் கோவை மாவட்ட அரிமா சங்க மண்டல தலைவர் டாக்டர். ஆனந்தகுமார், தலைவர் சுரேந்தர் பிள்ளை, முன்னாள் ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் எஸ் செல்வகுமார், டிரான்ஸண்டன்ட் எனர்ஜி டெக் சொல்யூஷன்ஸ் நிறுவனர் வின்சென்ட் மற்றும் கோபி அரசு தாமஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பாக செயலாற்றிய பள்ளி ஆசிரியர்களுக்கு பொன்னாடை மற்றும் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மூத்த ஆசிரியர்கள் இப்பள்ளியுடனான தங்களின் இனிய அனுபவங்களை இளைய ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
அனைத்து ஆசிரியர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர்களை தொடர்ந்து நாளை பள்ளி மாணவர்களுக்கும் மரக்கன்றுகள் வழங் கப்பட உள்ளன.
பள்ளியின் தாளாளர் விக்டர் சகாயராஜ் நன்றியுரை வழங்கினார்.