ஒன்றியத்தில் ஆட்சி வகிக்கும் பா.ஜ.க, இந்திய மொழிகளை வளர்ப்பதைக் காட்டிலும், இந்தியை வளர்ப்பதையும், சமஸ்கிருதத்தை திணிப்பதையும்தான் முக்கிய நோக்கமாக கொண்டிருக்கிறது என்பது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தொடர் குற்றச்சாட்டாகும்.
2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மொத்த மக்கள்தொகை 126.12 கோடி. அதில் 1 விழுக்காடு என்று எடுத்துக்கொண்டால் கூட 1.26 லட்சம் பேர். ஆனால் அதிலும் பாதி கூட இல்லாத அளவில், அதாவது வெறும் 24,821 மக்களே தாய்மொழியாக கொண்ட ஒரு மொழியை (சமஸ்கிருதத்தை), ஒட்டுமொத்த நாட்டின் ஆதிக்க மொழியாக்க மாற்ற ஒன்றிய அரசு பாடுபட்டு வருகிறது.
இது எல்லோரும் அறிந்த விஷயம் தான். அதற்காக, டெல்லி பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத பாடம், சமஸ்கிருத வளர்ச்சிக்கு 10 ஆண்டுகளில் ரூ.2,346 கோடி நிதி, பள்ளி கல்வியில் சமஸ்கிருத படிப்பு உள்ளிட்ட எண்ணற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுதான், பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ்-ன் நோக்கம் என்பதை உறுதிசெய்யும் பொருட்டு, டெல்லியில் நடந்த ஒரு நிகழ்வில், “சமஸ்கிருதம்தான் இந்தியாவின் பல மொழிகளுக்கு மூல மொழி” என்றும் பேசியுள்ளார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.
அது மட்டுமா, இன்னொரு படி மேலேபோய், நேற்று (ஜூன் 19) நடந்த முன்னாள் இந்திய ஆட்சிப்பணி அஷுதோசின் புத்தக வெளியீட்டு விழாவில், “இந்திய நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்பட வேண்டிவரும்” என சர்ச்சைக்குரிய ஒரு கருத்தையும் முன்வைத்துள்ளார் அமித் ஷா.
இந்தியாவில் பல தரப்பட்ட மொழிகள் பேசப்படுவதால், எந்த ஒரு குறிப்பிட்ட மொழியின் ஆதிக்கமும் இருந்திடக்கூடாது என்பதற்காக, ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருக்கிறது.
ஆகவே, அது சமஸ்கிருத, – இந்தி திணிப்பிற்கு எதிராக இருக்கிறது. அதனால், ஆங்கிலத்தை புறக்கணித்தால், இந்தி தலைதூக்கும் என்பதுதான், அமித்ஷா பேச்சின் சாராம்சம்.
மேலும் ஆங்கிலத்திற்கு எதிராக அமித்ஷா பேசிய காணொளியும், அது சார்ந்த செய்தியும், ANI ஊடகத்திலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளது. அமித்ஷாவின் பேச்சு, எதிர்ப்பை சந்தித்த சில நிமிடங்களில் இது நடந்துள்ளது.
இதனை சுட்டிக்காட்டி, “ஊடகத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதற்கு காரணம் என்ன? மிரட்டப்பட்டார்களா? என்று அரசியல் விமர்சகர்கள் வினாக்களைத் தொடுத்துள்ளனர்.
நேரடி இந்தி திணிப்பு நடவடிக்கைகள், மொழி வல்லுநர்களாலும், சமூக ஆர்வலர்களாலும் கண்டிக்கப்படும் சூழல் நிலவுவதால், ஆங்கில மொழியை துரத்தி அடிக்கும் மாற்று வழியை பாஜக கையிலெடுத்துள்ளதோ? நாடாளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் விவாதித்து எடுக்க வேண்டிய அதிமுக்கிய கொள்கை முடிவுகளைக்கூட, பொதுவெளியில் சர்ச்சை ஏற்படும் வகையில் பேசுவது ஏற்புடையதா?
இந்த கேள்வியைத் தான் நாட்டு மக்களும் எழுப்பி விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்!