அமெரிக்காவில் கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் இந்தியர்கள் உள்ளனர். சிறுபான்மை இனத்தவர்களாக இருந்தாலும் அமெரிக்க நாடாளுமன்றத்திலும் மாநில அவைகளிலும் அவர்களது பிரதிநிதித்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாகப் போட்டியிடும் இந்திய வம்சாவழி கமலா ஹாரிசை ஆட்சிப் பீடத்தில் அமரவைக்கும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்துள்ளது. கமலா ஹாரிஸ் வெற்றி பெற்று அதிபராக வேண்டும் என்று அங்கு வாழும் இந்தியர்கள் விழைகின்றனர்.
60 வயது கமலா ஹாரிசின் தாயார் ஓர் இந்தியர். அதுவும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். தந்தை ஜமைக்காவைச் சேர்ந்தவர். கமலாவின் தாயார் 1958ஆம் ஆண்டில் கலிஃபோர்னியாவை அடைந்தார். அப்போது அவர் 19 வயது மாணவியாக இருந்தார்.
எனவே, அமெரிக்க இந்தியச் சமூகத்தின் ஆதரவு முழுமையாக கமலா ஹாரிஸ்க்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஒளி அங்கு நாடுமுழுவதும் பரவி விட்டது. இந்தியரல்லாத அமெரிக்க சமூகத்தினரிடையேயும் அவருக்கான ஆதரவு பெருகி உள்ளது.
அரசியலில் இந்தியச் சமூகம் ஈடுபட அவர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் எந்த ஓர் அமைப்போ உள்கட்டமைப்போ அமெரிக்காவில் இருந்ததில்லை. ஆனால் இந்த அதிபர் தேர்தலில் கமலாஹாரிஸ் வெற்றி பெற வேண்டும் எண்ணம் அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் ஓங்கி இருப்பதைப் பார்க்க முடிகிறது. அவருக்கான பிரசாரக்கூட்டங்களுக்குச் செல்லும் அமெரிக்க இந்தியர்கள் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்து உள்ளது.
நவம்பர் மாதம் 5ஆம் தேதி அதிபர் தேர்தலில் வாக்களிக்க ஏறத்தாழ 2.6 மில்லியன் அமெரிக்க இந்தியர்கள் தகுதி பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் முழு ஆதரவு கிடைக்கும்பட்சத்தில் அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவே அமெரிக்காவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தன்னை எதிர்த்து போட்டியிடும் டொனால்டு ட்ரம்பிற்கு சரியான போட்டியாளராக கமலா ஹாரிஸ் பிரகாசித்து வருகிறார். அவர் வெற்றிபெற்றால் இந்தியா & அமெரிக்க நல்லுறவு இன்னும் பிரகாசமாக இருக்கும் என்ற நம்பிக்கை, இந்திய நாட்டு மக்களின் மனதில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க இந்தியர்களின் பரிபூரண ஆதரவோடு கமலா ஹாரிஸ் வெற்றிபெற்று அதிபராகட்டும்; வாழ்த்துவோம்!