fbpx
Homeபிற செய்திகள்உயிர் காக்க உதவிய 17 நிஜ ஹீரோக்களுக்கு “அலர்ட் பீயிங்” விருதுகள் வழங்கும் விழா

உயிர் காக்க உதவிய 17 நிஜ ஹீரோக்களுக்கு “அலர்ட் பீயிங்” விருதுகள் வழங்கும் விழா

பிறருக்கு உதவும் நல்ல உள்ளங்களை கவுரவிக்கும் வகையில், 9-வது “அலர்ட் பீயிங்” விருதுகள் வழங்கும் விழா கோவையில் நடைபெற்றது. ‘அலர்ட்’ தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில் நடந்த இவ்விருது வழங்கும் விழாவில் தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் தங்களின் கடமைக்கும் அப்பால் சென்று செயல்பட்டவர்கள் ஆகிய பிரிவுகளில் 17 நிஜ ஹீரோக்கள் விருது கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

இந்த விருதுகளை கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், கல்வியாளர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் ஆகியோர் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.

இதில் கவுரவ விருந்தினராக பி.எஸ்.ஜி சன்ஸ் அன்ட் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அலர்ட் கோவை மண்டல செயற்குழு உறுப்பினர்களான ரூட்ஸ் இயக்குனர் டாக்டர் சந்திரசேகர், பி.எஸ்.ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஜே.எஸ். புவனேஸ்வரன் மற்றும் சாண்ட்பிட்ஸ் பவுண்டரீஸ் நிர்வாக இயக்குனர் சரவணன் ரங்கநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதில், உலகளாவிய கருணைக்கான சத்யார்த்தி இயக்கத்தின் நிறுவனரும், நோபல் பரிசு பெற்றவருமான கைலாஷ் சத்யார்த்திக்கு ‘வாழ் நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது. கோவையை விபத்தில்லா நகரமாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ள கோவையைச் சேர்ந்த ‘உயிர்’ அமைப்புக்கு, சிறந்த அமைப்பிற்கான ‘ஐகான்’ விருதும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை மற்றும் பாலியல் அடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடும், பிரஜ்வலா அமைப்பின் இணை நிறுவனரும் சமூக ஆர்வலருமான பத்மஸ்ரீ சுனிதா கிருஷ்ணனுக்கு சிறந்த தனிநபருக்கான ‘ஐகான்’ விருதும் வழங்கப்பட்டது.

விடாமுயற்சிக்கு கே.பி.ஆர் குழுமத்தின் தலைவர் கே.பி.ராமசாமிக்கு ‘அலர்ட் எமினன்ஸ் விருது’ வழங்கப்பட்டது. உயிரைக் காப்பாற்ற தங்கள் உயிரையே பணயம் வைத்த 10 நிஜ ஹீரோக்களுக்கு ‘தனிநபர்’ பிரிவில் விருதுகள் வழங்கப்பட்டன.

‘கடமைக்கு அப்பால்’ எனும் பிரிவில், ரயில் நிலையத்தில் பிரசவம் பார்த்த இந்திய ராணுவத்தின் ‘ரியல் லைப் ரான்சோ’ மேஜர் ரோஹித்துக்கும், பொது இடத்தில் விபத்தில் சிக்கியவர்களுக்கு ‘டிராக்கியோஸ்டமி’ சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள் மனூப், தாமஸ் பீட்டர் மற்றும் டிடியா கே தாமஸ் ஆகிய மூவருக்கும் விருது வழங்கப்பட்டது. ‘அமைப்பு’ பிரிவில், சென்னையைச் சேர்ந்த ‘பிளேட்லெட் கிளப்’, கோயம்புத்தூரைச் சேர்ந்த ‘ஜீவசாந்தி டிரஸ்ட்’ மற்றும் ‘ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் காட்டன் சிட்டி’, மற்றும் ‘அமேசான் செல்லர் சர்வீசஸ்’ ஆகிய நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

விருது குழுவின் நடுவர் மற்றும் ஆலோசகர்களாக நேச்சுரல்ஸ் சலூன் நிறுவனர் வீணா குமாரவேல், ஓய்வுபெற்ற டி.ஜி.பி-யும், தலைமைத் தகவல் ஆணையருமான முகம்மது ஷகீல் அக்தர், ஆற்காடு இளவரசரின் வாரிசு நவாப்சாதா முகமது ஆசிப் அலி, லைப்லைன் மருத்துவமனை தலைவர் டாக்டர் ஜே.எஸ். ராஜ்குமார், மாற்றம் அறக்கட்டளை நிறுவனர் சுஜித் குமார் மற்றும் தொழில்முனைவோர் ஆனந்தகிருஷ்ணன் இருந்தனர்.

நிகழ்ச்சியின் ஆலோ சகர்களாக ரேடியன்ட் மருத்துவ சேவைகள் நிர்வாக இயக்குனர் டாக்டர் ரேணுகா டேவிட் மற்றும் நேச்சுரல்ஸ் குழுமத்தின் சி.இ.ஓ சி.கே. குமாரவேல் ஆகியோர் இருந்தனர்.

நிகழ்ச்சியில் அலர்ட் அமைப்பின் தலைவர் மைக் முரளிதரன் பேசுகையில், “பல கல்லூரிகள் அலர்ட் கோல்டன் ஆர்மியைத் தொடங்க முன்வருகின்றன. இதன் மூலம் உயிரைக் காப்பாற்றும் திறன் கொண்ட 1 கோடி தன்னார்வலர்களை உருவாக்க உள்ளோம்“ என்று கூறினார்.

விருது பெற்றவர்கள் குறித்து நிறுவன அறங்காவலர் கலா பாலசுந்தரம் பேசுகையில், “9-வது அலர்ட் பீயிங் விருதுகள் மனிதநேயத்தின் சிறப்பான உணர்விற்கான ஒரு எடுத்துக்காட்டாகும்“ என்றார்.

இணை நிறுவனரும் நிர்வாக அறங்காவலருமான ராஜேஷ் திரிவேதி பேசுகையில், “கருணைக்கும், கொடுக்கும் குணத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் கோவையில் இந்த விருது வழங்கும் விழா நடைபெற்றது எங்களுக்குப் பெருமையாக உள்ளது” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img