போத்தனூர் பிரதான சாலையில் விபத்துகள் ஏற்படக்கூடிய பகுதிகளில் சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட போத்தனூர் பிரதான சாலையில் குறிச்சி பிரிவு முதல் செட்டிபாளையம் சாலை வரை உள்ள பகுதிகளில் இந்த ஆய்வு நடைபெற்றது. இதில் நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறை, மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
மாநகராட்சிப் பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளுக்காக பல்வேறு இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டுள்ளன. இப்பணிகள் நிறைவடைந்த பகுதிகளில் பள்ளங்கள் முறையாக மூடப்பட்டுள்ளனவா, சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளனவா, வாகனப் போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் பராமரிக்கப்படுகின்றனவா என்பது குறித்து ஆணையாளர் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, சாலைகளில் உள்ள பள்ளங்கள் மற்றும் மேடுபள்ளங்களை உடனடியாகச் சீரமைக்கவும், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் முடிவடைந்ததும் காலதாமதமின்றி சாலைகளைத் தரமான முறையில் சீரமைக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். சீரமைப்புப் பணிகள் முடியும் வரை பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவும் கேட்டுக்கொண்டார்.
மேலும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சாலை விபத்துகளைத் தவிர்க்கவும் தேவையான இடங்களில் வேகத்த டைகள் அமைப்பது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை, வட்டாரப் போக்கு வரத்துத்துறை, போக்குவரத்துக் காவல்துறை, மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனிருந்தனர்.



