பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்த தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களுக்கு கோவை மாவட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் “நிறைந்த மனதுடன்“ நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
“மக்களின் நலனை முதன்மையாகக் கொண்டு செயல்பட்டு வரும் முதலமைச்சர், பதவியேற்ற நாள் முதல் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து, அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
குறிப்பாக தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்திடவும், மாணவ, மாணவியர்கள் பசியின்றிப் பள்ளியில் பயில்வதை உறுதிசெய்திடவும், கல்வியில் முழுமையான கவனம் செலுத்திடவும், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கும் காலை உணவு வழங்கிட அவர் உத்தரவிட்டார்.

அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தினை சென்னை திருவான்மியூரில் உள்ள காந்திகிராமம், சென்னை நடுநிலைப் பள்ளியில் 22&09&-2026 அன்று தொடங்கி வைத்தார்.
கோவை மாவட்டத்தில், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டத்தினை பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை அமைச்சர் தி வே.சம்பத்குமார், இரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும், மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் க.விக்னேஷ் அவர்கள், மதுக்கரை ஊராட்சி ஒன்றியம், மலுமிச்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலும் காலை உணவினை மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தினர்.

கோவை மாவட்டத்தில், விரிவாக்கம் செய்யப்பட்ட இத்திட்டத்தின் மூலம் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் 501 பள்ளிகளை சார்ந்த 56,550 பள்ளி மாணவ, மாணவியர்கள் பயன்பெறுவார்கள். ஏற்கெனவே, 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை 1,107 பள்ளிகளை சார்ந்த 71,028 மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். விரிவாக்கம் செய்யப் பட்ட இத்திட்டத்தினை சேர்த்து, மொத்தமாக 1,608 பள்ளி களைச் சார்ந்த 1,27,578 மாணவ, மாணவியர்கள் பயன் பெறுவார்கள்.
இத்திட்டத்தின்கீழ், மாணவ, மாணவிகளுக்கு திங்கள் மற்றும் புதன் அன்று பொங்கல் மற்றும் சாம்பார், செவ்வாய்க்கிழமை அன்று கோதுமை ரவா கிச்சடி மற்றும் சாம்பார், வியாழக்கிழமைதோறும் ரவா உப்புமா மற்றும் சாம்பார், வெள்ளிக்கிழமைதோறும் சேமியா கிச்சடி மற்றும் சாம்பார் ஆகிய உணவுகள் வழங்கப்படுகிறது.
இதன் மூலம் விரிவாக்கம் செய்யப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின்கீழ் பயன்பெற்ற மாணவ, மாணவியர் கீழ்க்கண்டவாறு தங்களது நன்றிகளை நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சருக்கு தெரிவித்தனர்.
இரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர் சக்திவேல் (6ம் வகுப்பு), நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் வாயிலாக தெரிவித்ததாவது:-

நான் கோவை இரத்தினபுரி மாநகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு பயின்று வருகிறேன். முன்பெல்லாம் காலையில் பள்ளிக்குச் செல்ல அவசரமாகத் தயாராகும்போது, சில நேரங்களில் சரியாகக் காலை உணவு சாப்பிட முடியாது. இதனால் பள்ளியில் பாடம் நடத்தும்போது சில நேரங்களில் சோர்வாக இருக்கும். தற்போது பள்ளியிலேயே பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின்கீழ் சத்தான காலை உணவு வழங்கப்படுவதால், தினமும் பள்ளிக்கு வந்தவுடன் நண்பர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிடுகிறேன். இதனால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. காலை உணவு சாப்பிட்ட பிறகு வகுப்புகளில் உற்சாகமாகப் பாடங்களைக் கவனிக்க முடிகிறது.
எங்க வீட்டில் அம்மா காலையிலேயே வேலைகளை முடித்துவிட்டு என்னை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். இப்போது பள்ளியிலேயே காலை உணவு கிடைப்பதால் அம்மாவுக்கும் வேலைப்பளு குறைந்திருக்கிறது. நான் தினமும் பள்ளிக்குச் செல்வ தற்கும் ஆர்வமாக இருக்கிறேன்.
எங்களைப் போன்ற மாணவர்களின் நலனுக்காக இந்த நல்ல திட்டத்தைச் செயல்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியினை நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்
மாணவி ஷஹானா பானு தெரிவித்ததாவது:

“நான் கோவை இரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 7-ஆம் வகுப்பு பயின்று வருகிறேன். நான் ஒரு விளையாட்டு வீராங்கனை, பயிற்சியினை மேற்கொள்ள காலையில் பள்ளிக்கு வந்துவிடுவேன். பள்ளியில் சில நேரங்களில் பசி காரணமாகப் பாடங்களைக் கவனிப்பதில் சிரமம் ஏற்படும். வீட்டில் காலை உணவு சாப்பிட நேரம் கிடைக்காத நாட்களில் பள்ளிக்கு வந்ததும் பசியாக இருக்கும். சரியாக விளையாடவும் முடியாது.
இப்போது எங்கள் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின்கீழ் சுவையான மற்றும் சத்தான உணவு வழங்கப்படுகிறது. பள்ளிக்கு வந்ததும் நண்பர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டு விட்டு எனது விளையாட்டு பயிற்சியில் சிறப்பாக பங்கெடுக்க முடிகிறது.
எனது பெற்றோரும் நான் தினமும் வயிறு நிறைய உணவு சாப்பிட்டுவிட்டுப் படிக்கிறேன் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறார்கள். இந்தத் திட்டத்தால் மாணவர்களாகிய எங்களுக்குக் காலை உணவு கிடைப்பதுடன், படிப்பிலும் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. எங்களைப் போன்ற மாணவர்களின் கல்வி மற்றும் நலனில் அக்கறை கொண்டு இத்திட்டத்தைச் செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்களைப் போன்ற மாணவர்கள் பள்ளிக்கு உற்சாகமாக வந்து படிப்பில் கவனம் செலுத்துவதற்கு மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்தை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொகுப்பு:
ஆ.செந்தில்அண்ணா.
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்.
இரா.சரண்,
(உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி),
கோவை மாவட்டம்.



