Homeபிற செய்திகள்ஒரே நேரத்தில் மொத்தமாக புறப்பட்டு செல்லும் வாளையார் - காந்திரபுரம் அரசு பஸ்களை சிறைப்பிடித்து பொதுமக்கள்...

ஒரே நேரத்தில் மொத்தமாக புறப்பட்டு செல்லும் வாளையார் – காந்திரபுரம் அரசு பஸ்களை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்

வாளையார் முதல் காந்திபுரம் வரை இயக்கப்படும் அரசு பேருந்துகள் ஒரே நேரத்தில் மொத்தமாக வந்து செல்வதால், பள்ளி மற்றும் வேலைக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருவதாக கூறி, நவக்கரை அருகே பொதுமக்கள் அரசு பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாளையார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்காக கோவை மாநகர பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்த நிலையில், அரசுப் பேருந்துகள் முறையான இடைவெளியின்றி ஒரே நேரத்தில் மொத்தமாக வந்து செல்வதாகவும், இதனால் அடுத்தடுத்த பேருந்துகள் கிடைக்காமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பேருந்துகளை சிறைபிடித்து நவக்கரை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பேருந்துகளை முறையான இடைவெளியில் இயக்க வேண்டும் என்றும், பொதுமக்களின் போக்குவரத்து சிரமத்தை உடனடியாக தீர்க்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து வந்த போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் உரிய நேரத்தில் பேருந்துகளை இடைவெளியுடன் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img