Homeபிற செய்திகள்காமராஜர் காலை உணவு விரிவாக்கத்திட்டம்:1,27,578 மாணவ, மாணவிகள் கோவை மாவட்டத்தில் பயன் பள்ளி மாணவ, மாணவியர்...

காமராஜர் காலை உணவு விரிவாக்கத்திட்டம்:1,27,578 மாணவ, மாணவிகள் கோவை மாவட்டத்தில் பயன் பள்ளி மாணவ, மாணவியர் பெருமிதம்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்த தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களுக்கு பள்ளி மாணவ, மாணவியர் நிறைந்த மனதுடன் “நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.


“மக்களின் நலனை முதன்மை யாகக் கொண்டு செயல்பட்டு வரும் முதலமைச்சர், பதவியேற்ற நாள் முதல் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து, அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
குறிப்பாக தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்திடவும், மாணவ, மாணவியர்கள் பசியின்றிப் பள்ளியில் பயில்வதை உறுதிசெய்திடவும், கல்வியில் முழுமையான கவனம் செலுத்திடவும், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கும் காலை உணவு வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டார்.


அதனைத்தொடர்ந்து, பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தினை சென்னை திருவான்மியூரில் உள்ள காந்திகிராமம், சென்னை நடுநிலைப் பள்ளியில் 22&09&2026 அன்று முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
கோவை மாவட்டத்தில், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்ட விரிவாக்கத்தினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், இரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் க.விக்னேஷ், மதுக்கரை ஊராட்சி ஒன்றியம், மலுமிச்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலும் தொடங்கி வைத்து காலை உணவினை மாணவ, மாணவியர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்கள்.
கோவை மாவட்டத்தில், விரிவாக் கம் செய்யப்பட்ட இத்திட்டத்தின் மூலம் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் 501 பள்ளிகளை சார்ந்த 56,550 பள்ளி மாணவ, மாணவியர் பயன்பெறுவார்கள். ஏற்கெனவே, 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை 1,107 பள்ளிகளை சார்ந்த 71,028 மாணவ, மாணவியர் பயன்பெற்று வருகின்றனர். விரிவாக்கம் செய்யப்பட்ட இத்திட்டத்தினை சேர்த்து, மொத்தமாக 1,608 பள்ளிகளைச் சார்ந்த 1,27,578 மாணவ, மாணவியர் பயன்பெறுவார்கள்.
இத்திட்டத்தின்கீழ், மாணவ, மாணவியருக்கு திங்கள் மற்றும் புதன் அன்று பொங்கல் மற்றும் சாம்பார், செவ்வாய்க்கிழமை அன்று கோதுமை ரவா கிச்சடி மற்றும் சாம்பார், வியாழக்கிழமைதோறும் ரவா உப்புமா மற்றும் சாம்பார், வெள்ளிக்கிழமைதோறும் சேமியா கிச்சடி மற்றும் சாம்பார் ஆகிய உணவுகள் வழங்கப்படுகிறது.
இதன் மூலம் விரிவாக்கம் செய்யப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின்கீழ் பயன்பெற்ற மாணவ, மாணவியர் தங்களது நன்றிகளை நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சருக்கு தெரிவித்தனர்.
மலுமிச்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி தேவலேகா, நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் வாயிலாக தெரிவித்ததாவது:-


“நான் மலுமிச்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 6-ஆம் வகுப்பு பயின்று வருகிறேன். நான் சில நாட்களில் குறித்த நேரத்திற்குள் பள்ளிக்கு வர வேண்டும் என்பதால், காலை உணவைச் சாப்பிடாமல் பள்ளிக்கு வந்து விடுவேன்.
தற்போது பள்ளியிலேயே காலை உணவு சத்தான உணவாக வழங்கப்படுவதால், இனிமேல் பள்ளிக்கு வந்தவுடன் சாப்பிட்டுவிட்டு, வகுப்புகளில் பாடங்களை நன்றாகக் கவனித்துப் படிப்பேன். “எங்க அம்மாவுக்கும் காலையில் சிரமம் குறைந்திருக்கு. நான் பள்ளியிலேயே காலை உணவு சாப்பிடுகிறேன். அதனால் அம்மாவும் சந்தோஷமா இருக்காங்க.” எனக்கு பள்ளியில நண்பர்களோட சேர்ந்து காலை உணவு சாப்பிடுறது ரொம்ப பிடிக்கும். எல்லாரும் ஒரே இடத்துல உட்கார்ந்து சாப்பிடும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதன் மூலம் பள்ளிக்கு வருவது எனக்கு ஆர்வமாக உள்ளது.
இத்திட்டத்தைச் செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியினை நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்
மலுமிச்சம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் பூமேஸ்வரன் நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் வாயிலாக தெரிவித்ததாவது:


“நான் மலுமிச்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ஆம் வகுப்பு பயின்று வருகிறேன். செட்டிபாளையம் பகுதியில் இருந்து பள்ளிக்கு வருகிறேன். நான் அவசரத்தில், பல நேரங்களில் காலை உணவைச் சாப்பிடாமல் பள்ளிக்கு வர வேண்டிய சூழ்நிலை இருந்தது. தற்போது பள்ளியிலேயே காலை உணவு வழங்கப்படுவதால், பள்ளிக்கு வந்தவுடன் சாப்பிட்டுவிட்டு, மகிழ்ச்சியாகவும், பசியில்லாமலும் வகுப்பிற்குள் சென்று பாடங்களை கவனத்துடன் படிக்க முடிகிறது. இதனால் எனது பெற்றோருக்கும் பெரும் உதவிகரமாக உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் வாயிலாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எங்களைப் போன்ற மாணவர்கள் பள்ளிக்கு உற்சாகமாக வந்து படிப்பில் கவனம் செலுத்துவதற்கு மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்தை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.”
தொகுப்பு:
ஆ.செந்தில்அண்ணா.
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்.
இரா.சரண்.
(உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி),
கோவை மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img