கோவை வனச்சரகம், துடியலூர் பிரிவு, தடாகம் வடக்கு சுற்று, மேல்முடி சரகத்திற்கு 2 கிலோ மீட்டர் தொலைவில் பெண் யானை ஒன்று உடல்நிலை சரியில்லாமல் விழுந்து இறந்த நிலையில் காணப்பட்டது. பிரேத பரிசோதனையானது உதவி வனபாதுகாவலர் (தலைமையிடம்) உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள், கோவை மண்டல விலங்குகள் குற்றம் கட்டுப்பாடு ஆணைய அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள், WWF, TREE, OSAI தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் ஆகியோர் முன்னிலையில் வனக்கால்நடை அலுவலர் மற்றும் மருத்துவர்கள் யானையின் பிரேத பரிசோதனையை மேற்கொண்டனர்.
பிரேத பரிசோதனை முடிவில் இறந்த பெண் யானையின் வயது 8 -முதல் 10 வயது வரை இருக்கலாம் எனவும், குடலில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக இறந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பெண் யானையின் உறுப்பு மாதிரிகள் மருத்துவக் குழுவின் மூலம் ஆய்வுக்காக எடுக்கப்பட்டுள்ளது.



