Homeபிற செய்திகள்கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற ஆட்டோ டிரைவர்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற ஆட்டோ டிரைவர்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முன்பாக, இருகூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு திடீரென தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. ஆட்டோ ஓட்டுநரான இவர், இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முன்பகுதிக்கு வந்தார்.யாரும் எதிர்பாராத வகையில், தான் மறைத்து எடுத்து வந்து இருந்த மண்ணெண்ணெயைத் திடீரெனத் தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைக்க முயன்றார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த காவல் துறையினர், அவரைத் தடுத்து நிறுத்தி மீட்டனர்.
தீக்குளிப்பு முயற்சியின் போது ஆவேசமாகப் பேசிய ஆட்டோ ஓட்டுநர் பெரியசாமி, பஞ்சாயத்துத் தலைவர் உள்ளிட்ட சிலர் சேர்ந்து என்னை அடித்துத் துன்புறுத்தினார்கள். இது குறித்துப் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மாநில மனித உரிமை ஆணையம் வரை சென்று முறையிட்டும் எனக்கு இதுவரை சரியான பதிலும் நியாயமும் கிடைக்கவில்லை,
எனக்கு நியாயம் வழங்காவிட்டால் பரவாயில்லை, ஒன்னு என்னை நேராகத் தூக்கு மேடையிலாவது ஏற்றுங்கள், எனக் கண்ணீருடன் வேதனையைப் பதிவு செய்தார்.
தீக்குளிப்பில் இருந்து மீட்கப்பட்ட பெரியசாமியிடம் பேச முயன்ற காவல்துறையினர், “உங்கள் புகாரை மனுவாகக் கொடுங்கள், கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறிச் சமாதானப்படுத்தி, விசாரணைக்காக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்த நபர் உண்மையிலேயே பஞ்சாயத்து நிர்வாகத்தினரால் பாதிக்கப்பட்டவரா? அல்லது வேறு காரணமாக இதுபோன்ற முடிவை எடுத்தாரா ? என்பது குறித்து ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தால் இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

படிக்க வேண்டும்

spot_img