கோவை அருகே வடவள்ளியில் இருந்து மருதமலை செல்லும் சாலையில் போக்குவரத்து எப்போதும் அதிகமாக இருக்கும். இந்த சாலையின் ஒரு பகுதியை சுமார் 6 மாதங்களுக்கு முன் தோண்டப்பட்டது. அது பாதாள சாக்கடை பணிக்காகவோ அல்லது குடிநீர் குழாய் பதிப்பதற்காகவோ தோண்டப்பட்டிருக்கலாம்.
தோண்டிய சாலையை வெறுமனே மண்ணை போட்டு ஏனோதானோ என்று பணியை முடிக்காமல் விட்டுவிட்டனர். அதனால் பாதிப்பிற்குள்ளான சாலை மீது வாகனங்கள் வேகமாகச் செல்லும்போது செம்மண் தூசி பறந்து அந்த வழியாக நடந்து செல்வோர் மீதும் டூவீலர்களில் செல்வோர் மீதும் படிகிறது. அந்த தூசியை ஒவ்வொருவரும் குறிப்பாக முதியவர்களும் குழந்தைகளும் சுவாசிக்க வேண்டியிருக்கிறது. மேலும் காலையிலும் மாலையிலும் பள்ளி சென்று திரும்பும் மாணவ, மாணவிகள், குழந்தைகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
எனவே தோண்டப்பட்ட வடவள்ளி & மருதமலை சாலைப்பகுதியை தார்ச்சாலையாக மாற்ற நெடுஞ்சாலைத் துறைக்கு அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். சாலையை முழுமையாக சீர் செய்யாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.



