Homeபிற செய்திகள்மலைவாழ்மக்களை வெளியேற்றுவதைகண்டித்து புதிய தமிழகம் போராட்டம்

மலைவாழ்மக்களை வெளியேற்றுவதைகண்டித்து புதிய தமிழகம் போராட்டம்

கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். மாஞ்சோலை மற்றும் மேகமலை மலைவாழ் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கோரி இருப்பது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.


இதுகுறித்து பேசிய கிருஷ்ணசாமி, மாஞ்சோலை மற்றும் மேகமலை மலைவாழ் மக்கள் அந்த மலையை நம்பி வாழ்வாதாரத்தை ஈட்டி வருவதாகவும் அவர்களை வெளியேற்றுவது சரியானது அல்ல என்று குறிப்பிட்டு இது தொடர்பாக 21 ஆம் தேதி திருநெல்வேலியில் அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக தெரிவித்தார்.


இதில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாடு அரசாங்கம் 2006ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வன உரிமை சட்டத்தை தற்பொழுது வரை அமல்படுத்தவில்லை என்றும் ஆனால் அந்த சட்டம் கேரளா, ஒரிசா போன்ற பல்வேறு மாநிலங்களில் செயல்பாட்டில் உள்ளது என்று தெரிவித்தார்.


மேலும் வன உரிமை சட்டம் குறித்து மாநில அரசும் பேசுவது இல்லை. அவ்வாறு பேசும் பட்சத்தில் உச்ச நீதிமன்றம் அதனை கவனத்தில் எடுத்துக் கொள்ளும் எனவும் தெரிவித்தார்.
தற்பொழுது மாஞ்சோலை மற்றும் மேகமலை மக்களை வெளியேற்றுவதற்கு அனுமதி கொடுத்தால் அடுத்து வால்பாறை, குன்னூர் ஆகிய பகுதி மக்களை தான் வெளியேற்றுவதற்கு வாய்ப்பு இருப்பதாக சுட்டிக் காட்டிய அவர் ஏழை எளிய மக்களை வெளியேற்றக் கூறும் அதே சமயம் ரிசார்டுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுவதாக கூறினார்.


வால்பாறையில் எல்லாம் தேயிலை தோட்டங்களை அழித்தும் யானை வழித்தடங்களை அழித்தும் ரிசார்ட்டுகள் கட்டப்பட்டு வருவதாகவும் மலைப்பகுதிகளில் வசதியானவர்கள் உல்லாசமாக இருப்பதற்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவதாகவும் கேள்வி எழுப்பி குற்றம் சாட்டினார்.


மேலும் அரசாங்கம் ரிசார்டுகள் விவகாரத்தில் உண்மையை சொல்ல தயங்குவதாகவும் அதற்கு அவர்களும் பினாமியாக இருக்கலாம் என்று கூறினார் வனத்துறை சட்டம் குறித்து இங்கு புரிதல் இல்லை என்று சாடிய அவர், அதிகாரிகள் இதனை சரியாக அரசுக்கு எடுத்து சொல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.


மேகதாதுவில் தமிழகத்திற்கு அருகிலேயே அணைக்கட்டும் பட்சத்தில் தற்பொழுது அவர்கள் திறந்து விடும் தண்ணீர் கூட கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றும் காவிரி நீர் தமிழகத்திற்கு வரும் வாய்ப்பு குறைந்து விடும். எனவே முதலமைச்சர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் முதல்வர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மேகதாது அணை தொடர்பாக குரல் எழுப்பிக் கொண்டே இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.


தற்பொழுது எம்எல்ஏக்களுக்கு அரசு சார்பில் கார்கள் உதவியாளர் வழங்கப்படுவது குறித்தான கேள்விக்கு அரசு கஜானா காலியாக இருக்கிறது என்று கூறும்பொழுது எங்கிருந்து இதற்கான பணம் வருகிறது என்பதை அவர்கள் தான் சொல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img