திருப்பூர் செல்வராஜ் நகர் எம் எஸ் நகர் பகுதியில் உள்ள நிர்மலா மெட்ரிக் பள்ளியில் 80வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பள்ளித் தாளாளர் ஆல்பர்ட் ஜெர்ரி ஜோ மற்றும் பள்ளி முதல்வர் ராணி இமாகுலேட் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், சின்னசாமி அம்மாள் பள்ளியின் முன்னாள் பட்டதாரி உதவித் தலைமையாசிரியை செலின் ராணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மாணவர்களுக்கு சுதந்திரத்தின் அருமை, நாட்டுப்பற்று மற்றும் ஒழுக்கத்தின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பரதநாட்டியம், பள்ளி சிறார்களின் நடனங்கள், வண்ணமயமான மலர்களுடன் உடற்பயிற்சி நிகழ்ச்சி, பாரம்பரிய ஒயிலாட்டம் ஆகியவை பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றன.
மேலும், சுதந்திரப் போராட்ட வீரர்களான திருப்பூர் குமரன் மற்றும் பகவத் சிங் ஆகியோரின் வீர வரலாற்றை எடுத்துரைக்கும் நாடகம் மாணவர்களால் சிறப்பாக அரங்கேற்றப்பட்டு அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.
விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



