கல்லூரி மாணவன் படுகொலையை கண்டித்து ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரி அருகே திமுக மாணவரணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
கோவை ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர் அமுதன் படுகொலையைக் கண்டித்து, ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள அக்கல்லூரி அருகே திமுக மாணவரணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்து வருவதாகவும், இது போதைப் புழக்கத்தால் ஏற்படும் பிரச்சனையே என்றும் குற்றம்சாட்டி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தவெக அரசு மாணவர்களின் வாழ்க்கையை சீரழிப்பதாகக் கூறி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில மாணவரணி செயலாளர் வீரமணி தலைமை உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வீரமணி, இந்த விவகாரத்தில் தவெக அரசு கல்லூரி நிர்வாகத்திற்கு சாதகமாக செயல்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
மாணவர் கொலையில் ஐந்து பேர் மட்டுமே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், திமுக ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறது என்று தெரிந்த உடனேயே அடுத்தடுத்து 9 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறிய வீரமணி, திமுக சார்பில் உயிரிழந்த மாணவர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஆட்சிக்கு வரும் முன்பு அனிதா வீட்டிற்கு செல்வார்கள், தரையில் உட்காருவார்கள். ஆனால், இப்போது நான்கு குழந்தைகள் இறந்திருக்கிறார்கள். ஆனால், முதல்வர் அந்தப் பக்கம் திரும்பிக்கூட பார்க்காத ஓடுகாலியாக உள்ளதாகக் கூறினார்.
மேலும், கரூரில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கிய இந்த அரசு, இறந்துபோன இந்த மாணவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குமா என்பதை நாங்கள் கேள்வியாக முன்வைக்கிறோம் என்றார்.



