வாக்காளர் பட்டியலை முழுமையாக வெளிப்படை யானதாகவும் துல்லியமானதாகவும் மாற்றுவதற்கு தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், நாட்டின் தேர்தல் முறையை சீர்குலைக்க யாரையும் அனுமதிக்க முடியாது என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்தார்.
கோவை எட்டிமடை பகுதியல் உள்ள அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தில் நடைபெற்ற 30வது பட்டமளிப்பு விழாவில் சிறப்புரையாற்றிய தலைமைத் தேர்தல் ஆணையர், இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பைச் சீர்குலைக்கப் பல்வேறு தரப் பிலிருந்தும் திட்டமிட்ட முயற் சிகள் நடப்பதைக் குறிப்பிட்டார்.
ஆதாரமற்ற குற்றச் சாட்டுகளுக்கும், பொய்ப் பிரச்சாரங்களுக்கும் இளைஞர்கள் பலியாகக் கூடாது என்றும், மாறாக உண்மையைத் தேடி விழிப் புணர்வுடன் முன்னேற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“எதிர்காலத்தை நோக்கும் இந்தியா புதிய தலைமுறையினரை நம்புகிறது. நாடு உங்கள் நம்பிக்கையையும் அயராத கடின உழைப்பையும் சார்ந்துள்ளது. இந்தியாவின் மகத்தான வளர்ச்சிக்கு உங்களின் தீவிர பங்களிப்பு இன்றியமையாதது” என்று ஞானேஷ்குமார் கூறினார்.

சிறப்பு விருந்தினரான நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் ஆர்.பாலசுப்ரமணியம் பேசுகையில், சமூகத்திற்கு சேவை செய்வதில்தான் கல்வியின் உண்மையான நிறைவு கிடைக்கிறது என்பதை வலியுறுத்தினார். ஒருவரின் சமூகப் பங்களிப்பே மிகவும் முக்கியமானது என்றும், பெற்ற அறிவும் அனுபவமும் நாட்டு மக்களும் பயன்பெறும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவ்விழாவில் அம்ருதா விஸ்வ வித்யாபீடம் அறங்காவலர் ஸ்வாமி இராமகிருஷ்ணானந்தபுரி ஆசியுரை இடம்பெற்றது.
டாக்டர். பி. வெங்கட் ரங்கன் (துணைவேந்தர்), டாக்டர். பிபின் நாயர் (பதிவாளர்), மற்றும் டாக்டர். சசங்கன் ராமநாதன் (டீன்) ஆகியோரும் இக்கூட்டத்தில் உரையாற்றினர்.
இந்த 30வது பட்டமளிப்பு விழாவில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் என மொத்தம் 2,197 மாணவர்கள் தங்கள் பட்டங்களைப் பெற்றனர். அம்ருதா விஸ்வ வித்யாபீடம் மற்ற வளாகங்களில் பயின்ற பட்டதாரிகள், வரும் நாட்களில் அவரவர் வளாகங்களில் திட்ட மிடப்பட்டுள்ள தேதிகளில் தங்கள் பட்டங்களைப் பெறுவார்கள்.



