fbpx
Homeபிற செய்திகள்கோவையின் அழகை மீட்க மாநகராட்சி முயற்சி: போஸ்டர் கலாச்சாரத்தை ஒழிக்க அழகிய சுவரோவியங்கள் வரையும் பணி...

கோவையின் அழகை மீட்க மாநகராட்சி முயற்சி: போஸ்டர் கலாச்சாரத்தை ஒழிக்க அழகிய சுவரோவியங்கள் வரையும் பணி தீவிரம்

கோவையின் அழகை பாழ் படுத்தும் விதமாக அதிகரித்து வரும் போஸ்டர் கலாச்சாரத்தை ஒடுக்க, சுவரோவியங்கள் வரையப் பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.
கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சுவர்களில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள், தனியார் நிறுவனங்களின் விளம்பரங்கள், பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்கள், நினைவேந்தல் அறிவிப்புகள் உள்ளிட்ட ஏராளமான போஸ்டர்கள் நகரின் முக்கிய சாலைகள், மேம்பாலங்கள், பொது கட்டிடங்கள் மற்றும் சுவர் பகுதிகளில் ஒட்டப்பட்டு நகரின் அழகை பெருமளவில் பாதித்து வருகின்றன.


இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்த நிலையில், கோவை மாநகராட்சி, நகரின் அழகை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். பல ஆண்டுகளாக அடுக்கடுக்காக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் முழுமையாக அகற்றப்பட்டு, சுவர்கள் சுத்தம் செய்யப்பட்டு புதுப்பொலிவு பெறும் வகையில் சீரமைக்கப்பட்டு வருகின்றன.


போஸ்டர்களை அகற்றுவதோடு மட்டுமல்லாமல், அந்த சுவர்களை மக்கள் பயன்பெறும் வகையில் மாற்றும் நோக்கில் பல்வேறு கருத்து களை எடுத்துரைக்கும் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, இயற்கை விவசாயத்தின் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரக்கன்றுகள் நடுவதன் முக்கியத்துவம், தூய்மை இந்தியா, பிளாஸ்டிக் ஒழிப்பு, நீர் சேமிப்பு உள்ளிட்ட சமூக விழிப்புணர்வு கருத்துகளை வலியுறுத்தும் ஓவியங்கள் இடம் பெறுகின்றன. மேலும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் தன்னம்பிக்கை வாசகங்கள், சாதனை படைத்தவர்களின் கருத்துகள், வாழ்க்கையில் முன்னேற தூண்டும் சித்திரங்களும் வரையப்பட்டு வருகின்றன.


வண்ணமயமான இந்த ஓவியங்கள் நகரின் தோற்றத்தை மாற்றியமைத்துள்ளதுடன், பொதுமக்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன. இதுவரை போஸ்டர்களால் மறைக்கப்பட்டு காணப்பட்ட சுவர்கள் தற்போது கலைநயத்துடன் காட்சிய ளிப்பதால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். பலர் இந்த ஓவியங்களின் முன்பு நின்று புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர்.இதுகுறித்து பொது மக்கள் மற்றும் மாணவர்கள் கூறுகையில், அனுமதியின்றி சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டுவது நகரின் அழகை மட்டுமல்லாமல், சுத்தத்தையும் பாதிக்கிறது. அவற்றை அகற்றி விழிப்புணர்வு ஓவியங்களை வரைவது பாராட்டத்தக்க முயற்சியாகும். இதுபோன்ற பணிகள் நகரின் அனைத்து பகுதிகளிலும் தொடர வேண்டும் என்றும், பொது மக்களும் சுவர்களில் சட்டவிரோதமாக போஸ் டர்கள் ஒட்டுவதைத் தவிர்த்து மாநகராட்சியின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். நகரை தூய்மையாகவும், அழகாகவும் மாற்றும் நோக்கில் மேற்கொள் ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, கோவை மாநகராட்சியின் முக்கிய முயற்சிகளில் ஒன்றாக பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

படிக்க வேண்டும்

spot_img