கோவை பேரூர் தமிழ்க் கல்லூரி மற்றும் பல்சமயம் நல்லுறவு இயக்கம் சார்பில், கல்லூரி மாணவர்களுக்கான போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் நாடக நிகழ்ச்சி நடந்தது.

பல ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் பல் சமயம் நல்லுறவு இயக்கம், இம்முறை கல்லூரி மாணவர்களை மையமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

அதன் முதல் நிகழ்ச்சியாக பேரூர் தமிழ்க் கல்லூரியில் நடந்த நிகழ்வுக்கு, பேரூர் சாந்தலிங்க மருதாசல அடிகளார் மற்றும் பல் சமயம் நல்லுறவு இயக்கத் தலைவர் முகமது ரபீக் தலைமை வகித்தனர்.
நிகழ்ச்சியில், போதைப் பொருள் பயன்பாட்டின் தீமைகளை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு பாடல் வெளியிடப்பட்டு, மாணவர்களுக்கு திரையிடப்பட்டது. தொடர்ந்து, போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கும் நாடகம் அரங்கேற்றப்பட்டதுடன், விழிப்புணர்வு பேரணியும் நடத்தப்பட்டது.



