கோவை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் ரோட்ராக்ட் அமைப்பின் (புதிய மாவட்ட நிர்வாகிகளுக்கான பதவியேற்பு விழா மற்றும் பயிற்சி கருத்தரங்கம் ‘டேக் ஆஃப்’ என்ற பெயரில் நடைபெற்றது.
விழா குறித்து ரோட் ராக்ட் கிளப் ஆஃப் கோவை கேலக்ஸி அமைப்பைச் சேர்ந்த ஜெய் கிஷோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:ரோட்டரி அமைப்பின் இளைஞர் பிரிவான ரோட்ராக்ட் மாவட்டத்தின் இந்த ஆண்டிற்கான புதிய தலைவராக ரோட்ராக்ட் கிளப் ஆஃப் கோவை கேலக்ஸியைச் சேர்ந்த விஜய் விக்னேஷ் பொறுப்பேற்றுள்ளார். இந்த ஆண்டில் அவரது தலைமையின் கீழ் சுமார் 2,500க்கும் மேற்பட்ட ரோட்ராக்ட் உறுப்பினர்கள் இணைந்து பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
இந்த ‘டேக் ஆஃப்’ மாநாட்டை ரோட்ராக்ட் கிளப் ஆஃப் கோவை கேலக்ஸி, பி.எஸ்.ஜி கிருஷ்ணம்மாள் கல்லூரி மற்றும் ஹிந்துஸ்தான் கல்லூரி ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தியுள்ளன. இதில் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் இருந்து 1,200க்கும் மேற்பட்ட மாணவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
18 முதல் 25 வயதுக் குட்பட்ட இளைஞர்களைக் கொண்டு இயங்கும் இந்த சமூக நல அமைப்பின் மூலம், இந்த ஆண்டில் பொதுமக்களுக்கான சமூக மேம்பாட்டுத் திட்டங்கள், சுற்றுச்சூழல் திட்டங்கள் மற்றும் முக்கியமாக விசேஷ குழந்தைகள் எனப்படும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் நலனுக்காகப் பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்தத் திட்ட மிடப் பட்டுள்ளது. மாநாட்டில் பங்கேற்ற மாணவர்களுக்குத் தலைமைப் பண்பு மற்றும் சமூக சேவைகளுக்கான பிரத்யேக பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன என்று அவர் கூறினார்.
இந்த மாநாட்டில் ரோட்ராக்ட் அமைப்பின் புதிய நிர்வாகிகள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.



