கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், நெடுகுளா மற்றும் ஜக்கனாரை ஆகிய ஊராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், நெடுகுளா ஊராட்சி தொடக்கப்பள்ளியில் சமையற் கூடம், சமையற்கூட இருப்பு அறை, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், நெடுகுளா அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடியானார். பின்னர் நெடுகுளா வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தினை ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.
மேலும், நெடுகுளா கிளை நூலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, நூலகத்திற்கு வருகைபுரிந்திருந்த பொது மக்களுடன் கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து, நெடுகுளா ஊராட்சி ஜடையலிங்கா தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகள், வங்கியின் செயல்பாடுகள் குறித்தும், பயிர் கடன் தொடர்பாகவும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும், அதே பகுதியில் செயல்படும் நியாயவிலைக்கடையில் பதிவேடுகள், பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நெடுகுளா ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் பொதுமக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், கைத்தளாபகுதி அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் எடை, உயரம், வருகைப்பதிவேடு, உணவுப்பொருட்களின் இருப்பு ஆகியவற்றினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், அந்தமுக்கு பகுதியில் ரூ.1.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டப் பணிகள் மற்றும் கேசலாடா மூன்ரோடு பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

இவ்வாய்வின் போது குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) டினுஅரவிந்த், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) ரூபன்சங்கர்ராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், கோத்தகிரி வட்டாட்சியர் மகேந்திர குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், விவேகானந்தன், ஊரக வளர்ச்சித்துறை உதவி பொறியாளர் ஜெயந்தி உட்பட பலர் உடனிருந் தனர்.



