இது ஓர் அவசர உலகம்; வீடுகளிலும் சரி; அலுவலகங் களிலும் சரி இயந்திரத்தனமான வாழ்க்கை முறைகள். விடியலில் இருந்து உறங்கச் செல்லும்வரை எதிலும் வேகம், எங்கும் வேகம்.
மக்கள் பெருக்கத்தைப் போலவே வாகனப் பெருக்கம். போக்குவரத்து நெரிசல், சாலைவிதிகளை அறியாத அல்லது மதியாத மக்கள்; இதனால் இங்கு விபத்துக்களுக்குப் பஞ்சமே இல்லை.
நமது நாட்டில் விபத்துச் செய்திகள் இடம்பெறாத செய்தித் தாள், தொலைக்காட்சியை காண்பது அரிது.
ஓர் உண்மை தெரியுமா? விபத்து ஏற்பட்ட வர்களுக்கு உடனடியாகத் தகுந்த முதலுதவிகளைத் தந்துவிட் டால் போதும். பெரும்பாலான உயிர்களைக் காப்பாற்ற இயலும்.
விபத்தில் உதவுவது போலவே ஒருவரின் உடல்நலம் பாதிக்கப்படும்போது மருத்துவ வசதிகளை நாடுவதற்கு முன்பே நம்மால் உயிர் காக்க உதவ முடியும். உதாரணமாக திடீரென ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டாலே,அல்லது ஒருவர் மூச்சு விட முடியாமல் மயங்கி விழுந்தாலோ மருத்துவ உதவி கிடைக்கும் வரை அவரின் மூளையையும் பிற உறுப்புகளையும் காப்பாற்ற சி.பி.ஆர். (Cardiopulmonary Resuscitation )சிகிச்சை உதவுகிறது. இது மார்பு அழுத்தங்கள் மற்றும் செயற்கை சுவாசம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

ஆனால், இங்கு நடப்பதென்ன? விபத்துக்குள்ளானவர்கள் உயிருக்குப் பேராடும்போது. அவர்களை வேடிக்கைப் பார்க்கவும்,ரீல்ஸ் எடுக்கவும் மக்கள் கூட்டம் கூடுகிறார்களே தவிர,அவர்களுக்கு முதல் உதவி செய்து, உயிருக்கு வரும் ஆபத்தைத் தவிர்த்து காலத்தோடு மருத்துவ உதவி கிடைப்பதற்கு உதவுபவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். காரணம், நமது மக்களுக்கு முதலுதவி பற்றிய படிப்பறிவும் பயிற்சிகளும் மிகக் குறைவு.
வெளிநாடுகளில் முதல் உதவி பற்றிய பாடங்களையும் பயிற்சிகளையும் பள்ளிப் பாடங்களில் கட்டாயமாக்கி உள்ளனர்.அங்கு படிக்கும் மாணவர்கள் படிப்பை முடித்து வெளியேறும் போது முதல் உதவி முறைகளில் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
நமது கல்வி நிறுவனங்களில் இது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை என்பது வருந்தத்தக்க செய்தி.முதல் உதவி சிகிச்சைக்கு பயிற்சி தரும் நிறுவனங்களும் உள்ளன .நர்ஸ் பயிற்சியைப் போல முதல் உதவி பயிற்சி பெறாதவர்களும் சில அடிப்படை விஷயங்களை அறிந்திருந்தால் முதல் உதவி சிகிச்சை தரலாம்.
முதல் உதவிப் பெட்டி (First Aid Box)
ஒவ்வொரு வீட்டிலும் முதல் உதவி அளிப்பதற்கான சாதனங்களை கொண்ட ஒரு பெட்டி அவசியம் இருக்க வேண்டும்.இந்த முதல் உதவி பெட்டகம் சுத்தமான ஈரக்கசிவு இல்லாத இடத்தில் இருக்க வேண்டும். பெட்டி இருந்தால் மட்டும் போதாது.அதில் அவசியம் இருக்க வேண்டிய பேன்டேஜ் துணிகள், கிரிமிநாசினி, பஞ்சுகள், கத்திரிக்கோல் போன்ற அத்தியாவசிய பொருட்கள் எல்லாம் கட்டாயம் இருக்க வேண்டும். காய்ச்சலை அறிய உதவும் தெர்மாமீட்டர் உட்பட எல்லா அத்தியவசியப் பொருட்கள் இருப்பது முக்கியம்.
பிறருக்கு உதவி செய். கஷ்டப்படுபவர்களுக்கு, துன்பப்படுபவர்களுக்கு உன்னால் முடிந்த உதவியைச் செய்.பிறர் துன்பம் துடைப்பதில் நீ இன்பம் காண்பாய் உன்னால் உதவ முடியும் போது நீ, அதைச் செய்யாமல் ஒதுங்கிக் கொள்ளக் கூடாது.
பள்ளி, கல்லூரிகளில் முதல் உதவி பயிற்சிகளை சொல்லித்தர வேண்டும்.இதை ஒரு வாழ்வியல் முறையாக மனதில் பதிய வைக்க வேண்டும்.
விபத்து நடக்கும்போது பாதிக்கப்பட்டவர்களை எப்படி காப்பாற்ற வேண்டும்… எப்படி முதல் உதவி சிகிச்சை அளித்து… தேவைப்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதை சொல்லித்தருவது மிகவும் முக்கியம்.

கட்டுரையாளர்:
டாக்டர் ஜி.ராஜமோகன்,
உளவியல் நிபுணர்
Email: rajamohanpresidency@gmail.com
9087007908.



