fbpx
Homeபிற செய்திகள்காமன்தொட்டி கால்நடை மருந்தகத்தில்கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ் குமார் ஆய்வு

காமன்தொட்டி கால்நடை மருந்தகத்தில்கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ் குமார் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், காமன்தொட்டி கால்நடை மருந்தகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த மருந்தகத்திற்கு உட்பட்ட 6 கிராம ஊராட்சிகளில் 60 குக்கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் உள்ள 5,750 மாட்டினங்கள், 800 வெள்ளாடுகள், 3,700 செம்மறியாடுகள் மற்றும் 3,000 கோழிகள் இக்கால் நடை மருந்தகம் மூலம் பயன்பெற்று வருகின்றன.


இம்மருந்தகத்தில் கால்நடைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை விபரங்கள், குடற்புழு நீக்கம் மற்றும் செயற்கை முறை கருவூட்டல், வருடந்தோறும் கால்நடைகளுக்கு செலுத்தப்படும் தடுப்பூசி, மலடு நீக்க சிகிச்சை முகாம் பணிகள், கால் நடைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படும் போது 1962 என்ற கட்டணமில்லா அலைபேசி மூலம் வரப்பெறும் அழைப்புகளுக்கு நடமாடும் கால்நடை மருந்தகங்கள் மூலம் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கால்நடை மருத்து வர்களிடம் கேட்டறிந்தார்.


மேலும், இம்மருத்துவமனையில் கால்நடைகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள், பால் உற்பத்தி மற்றும் பால் உற்பத்திக்காக வழங்கப்படும் தொகை குறித்து கால்நடை விவசாயிகளிடம் கேட்டறிந்தார். மேலும், மருந்துகள், தாது உப்புகள் இருப்பு பதிவேடுகளை பார்வையிட்டார்.
தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் ஜூலை 31 வரை கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. எனவே கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளுக்கு தவறாமல் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, ஓசூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சியின்போது, வரப்பெற்ற மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், நிலுவையில் உள்ள மனுக்களின் விபரங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்தார்.


மேலும் அரசுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து உடனடியாக அவற்றை நீக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது, ஓசூர் சார் ஆட்சியர் ஆக்ரிதி சேத்தி, ஓசூர் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் மரு.தீபா, வட்டாட்சியர்கள் ஜெகதீஸ்குமாபி, ரமேஷ், காமன்தொட்டி கால்நடை உதவி மருத்துவர் மரு.சீதா லட்சுமி மற்றும் கால்நடை ஆய்வாளர், துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img