கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 19ஆவது பட்டமளிப்புவிழா இன்று (23ம் தேதி) காலை 10.30 மணிக்கு கல்லூரி வளாகத்தில் உள்ள முனைவர் மாரப்பகவுண்டர் ஆறுச்சாமி கலையரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் திருவாரூர், தமிழ்நாடு மத்தியப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் எம்.கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பட்டதாரிகளுக்குப் பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அவர் பேசுகையில், ஒவ்வொருவரும் உயர்கல்வி பயின்று பட்டம் பெறுவதற்கு முதல் காரணம் அவர்களது பெற்றோர்கள் என்றும் பெற்றோர்கள் தங்களது உறக்கம், மகிழ்ச்சி ஆகியவற்றைத் தியாகம் செய்து தங்களது பிள்ளைகளை முன்னேறச் செய்கின்றனர் என்றும் அத்தகைய பெற்றோர்களைத் தெய்வமாகக் கருதி வணங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். உயர்கல்வி என்பது அதனைப் படித்து முடித்தவரின் குடும்பத்தைப் பாதுகாப்பதற்கானது மட்டுமல்ல அது சமுதாயத்தைக் காப்பதற்கானது என்பதைப் பட்டதாரிகள் உணர வேண்டும் என்றார்.

உயர்கல்வியில் செய்யப்படும் ஆராய்ச்சியின் விளைவுகளான புதிய கண்டுபிடிப்புகள் நாட்டின் கடைக்கோடியில் உள்ள குடிமகன் வரை சென்று சேரும்போது தான் அந்த உயர்கல்வி முழுமையான பயனைத் தருவதாக அமையும் என்றும் கடின உழைப்பு, தனித்திறன், ஒழுக்கம், நேர்மை ஆகிய நற்பண்புகள் தான் ஒருவரை முன்னேற்றும்” என்றும் துணைவேந்தர் எம்.கிருஷ்ணன் அறிவுறுத்தினார். .
முன்னதாக கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி.ஏ.வாசுகி தலைமை உரையாற்றினார். அவர்தம் உரையில், “வளமான நாடு என்பது அங்குள்ள இயற்கை வளம் மற்றும் செல்வ வளம் ஆகியவற்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. அங்கு வாழும் மக்களின் அறிவு, பண்பாடு ஆகியவையும் வளமானதாக இருந்தால் தான் அது வளம் பொருந்திய நாடு என்றும் உண்மையான வெற்றி என்பது உயர்கல்வி கற்று ஊதியம் குவிப்பது மட்டுமல்ல சிறந்த விழுமியங்களை உருவாக்குவது என்றும் குறிப்பிட்டார்.

பட்டமளிப்பு விழா நிகழ்வைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் வே.சங்கீதா தொடங்கி வைத்தார். இப்பட்டமளிப்பு விழாவில் இளநிலை மற்றும் முதுநிலைத் தேர்வுகளில் தரவரிசைப் பெற்ற பட்டதாரிகளுக்கு முதலில் பட்டங்கள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இளநிலை பட்டதாரிகள் 1068 பேருக்கும் முதுநிலை பட்டதாரிகள் 235 பேருக்கும் முதுநிலை பட்டயப்படிப்பை நிறைவுசெய்த 29 பேருக்கும் சிறப்பு விருந்தினர் பட்டங்களை வழங்கினார்.
விழாவின் நிறைவில் பட்டம்பெற்ற பட்டதாரிகள் அனைவரும் எழுந்து நின்று உறுதிமொழி ஏற்றனர்.



