கோவை கண்ணம்பாளையம் மற்றும் நடுப்பாளையம் ஆகிய பகுதியில், கடந்த 13 ஆண்டுகளாக ஆதித்தமிழன் வீர சிலம்பாட்டம் கலைக்கூடம் மற்றும் எர்த் ட்ராகன் மார்ஷியல் ஆர்ட்ஸ் எனும் பயிற்சி மையத்தை, சிலம்ப ஆசான் நாக சுந்தரம் நடத்தி வருகின்றார். இங்கு மாணவ மாணவியர்களுக்கு கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட பல் வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றது. இங்கு சுமார், 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிலம்பம், கராத்தே, உள்ளிட்ட பயிற்சிகளை பெற்றுள்ளனர். மேலும் 500க்கும் மேற்பட்ட மாணவர்களை, போட்டிகளுக்கு தயார் செய்து, மாவட்ட, மாநில மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில், பங்கேற்க வைத்து வெற்றி பெற வைத்துள்ள அகாடமியாக இந்த பயிற்சி மையம் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை, நேபாளத்தில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒருங்கிணைப்பில், விளையாட்டு மற்றும் செயல்பாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை சார்பாக, போக்ரா மைதானத்தில் சர்வதேச அளவில், கராத்தே மற்றும் சிலம்ப போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டிகளில், கலந்து கொள்ள, ஆதித்தமிழன் வீர சிலம்பாட்ட கலைக்கூடம் மற்றும் எர்த் டிராகன் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமியில் பயிலும் மாணவர்கள் 16 பேர், தலைமை ஆசான் நாக சுந்தரம் தலைமையில் நேபாளம் சென்று, சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு, 16 பேரும் முதல் பரிசை தட்டிச் சென்றனர்.
அவ்வாறு வெற்றி பெற்ற, 16 மாணவ மாணவியர்களும், ரயில் மார்க்கமாக நேற்று கோவை திரும்பினர். இவர்களுக்கு கோவை ரயில் நிலையத்தில், பெற்றோர்கள், பொதுமக்கள் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



