திருப்பூரில் செயல்பட்டு வரும் கே.பி.ஆர் மில் நிறுவனத்தின் கே.பி.ஆர் பெண் ஊழியர்கள் கல்வி மையம் சார்பில், பணியாற்றிக் கொண்டே உயர்கல்வி பயின்ற பெண் ஊழியர்களுக்கான 12வது பட்டமளிப்பு விழா திருப்பூரில் உள்ள Quantum Knits–3 அரங்கில் நடை பெற்றது.
விழாவிற்கு கே.பி.ஆர் மில் தலைவர் டாக்டர் கே.பி.ராமசாமி தலைமை தாங்கி பட்டமளிப்பு விழாவைத் தொடங்கி வைத்தார். நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.ஆர்.ஆனந்தகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி எஸ். ஸ்ரீமதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 618 பெண் ஊழியர்களுக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில், “ஒரு காலத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் வளர்ச்சி அடையாது என்று கூறப்பட்டாலும் இன்று அந்த நிலை மாறிவிட்டது. இந்தியா போன்ற நாடுகள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன.
நாட்டில் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அதி கரிக்க வேண்டும். நாம் இறக்குமதி செய்யும் பல பொருட்களை நாமே தயாரித்தால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்,” என்றார்.
மேலும் பெண்கள் வாழ்க்கையில் வரும் சவால்களை தைரியமாக எதிர்கொண்டு சாதிக்க வேண்டும் என்றும், குடும்பத்தினரின் நம்பிக் கையை மதித்து முன்னேற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நாட் டுப்பற்றுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து ஊக்கப்பேச்சாளர் மரபின் மைந்தன் முத்தையா மற்றும் சென்னை இன்போசிஸ் நிறுவனத்தின் மனிதவள துணைத் தலைவர் ஜே. சுஜித்குமார் வாழ்த்துரை வழங்கினார். இந்த பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 618 பெண் ஊழியர்கள் பட்டம் பெற்றனர்.
இவர்களில் 17 பேர் பல்கலைக்கழக தரவரிசை பெற்றுள்ளனர். அதில் முதல் நிலை 5 பேர், இரண்டாம் நிலை 4 பேர், மூன்றாம் நிலை 8 பேர் அடங்குவர். இந்த 17 மாணவிகள் கடந்த 2025 செப்டம்பர் 25ஆம் தேதி சென்னை நகரில் நடைபெற்ற தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் முன்னிலையில் பதக்கம் மற்றும் பட்டம் பெற்றுள்ளனர்.
மேலும் 2021-2024 கல்வியாண் டில் கே.பி.ஆர் நிறுவனத்தின் பல்வேறு தொழிற் சாலைகளில் பணியாற் றும் 74 பெண் ஊழியர்கள் தங்களது படிப்புகளில் முதன்மை பெற்றுள்ளனர்.
கே.பி.ஆர் மில் நிறுவனத்தின் கல்வித் திட்டத்தின் மூலம் இதுவரை மொத்தம் 44,250 பெண் ஊழியர்கள் உயர்கல்வியை நிறைவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 1,500 பெண் ஊழியர்கள், அலுவலக பணியாளர்கள், பட்டம் பெறும் மாணவிகள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மனிதவளத் துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். விழாவின் இறுதியில் கே.பி.ஆர் மில் நிர்வாக இயக்குநர் ஈ.கே.சக்திவேல் நன்றி கூறினார்.



