கோவை அவிநாசி ரோட்டில் உள்ள கொடிசியா தொழில் கண்காட்சி வளாகத்தில் தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா) சார்பில் சர்வதேச ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்கள் கண்காட்சி டெக்ஸ்ஃபேர் 2026 துவங்கியது.

நான்கு நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சி மார்ச் 6 முதல் மார்ச் 9 வரை, காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை, கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியை ராம்கோ குழுமத் தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பி.ஆர். வெங்கட்ராம ராஜா தொடங்கி வைத்தார்.
இந்திய ஜவுளித் தொழில் கூட்ட மைப்பின் தலைவர் பி. அஷ்வின் சந்திரன் தொடக்க விழாவிற்கு தலைமை தாங்கினார்.
மத்திய எம்.எஸ்.எம்.இ அமைச்சகத்தின் இயக்குனர் சுரேஷ் பாபுஜி மற்றும் ஷலீன் தோஷ்னிவால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

சைமா தலைவர் துரை பழனிசாமி வரவேற்று பேசும் போது சந்திரன் “மேற்காசிய நாடுகளில் ஏற்பட்ட திடீர் போரால் இந்திய ஏற்றுமதியை பெருமளவில் பாதித்துள்ளது. போர் சூழல் நீடிக்குமானால், பண மதிப்பிழப்பு, இறக்குமதியை பாதிக்கும்“ என்றார்.

தொடர்ந்து சைமா துணைத் தலைவர் எஸ். கிருஷ்ணகுமார், ராம்கோ குழுமத்தின் தலைவர் வெங்கட்ராம ராஜா, இந்திய ஜவுளிக் கூட்டமைப்பின் தலைவர் அஸ்வின் சந்திரன், இந்திய டெக்ஸ்டைல் இயந்திர உதிரி பாகங்கள் தயாரிப் பாளர் சங்கத்தின் தலைவர் கனக ராஜ் உள்ளிட்டோர் பேசினர். சைமா இணைத் தலைவர் சிவராஜ் நன்றி தெரிவித்தார்.



