இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் ஓர் அங்கமான கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் (ICAR-SBI), பாலக்காட்டில் உள்ள வேளாண் அறிவியல் மையத்துடன் இணைந்து, கடந்த 10ம் தேதி அன்று பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி மலைப்பகுதியில் உள்ள மேலசூட்டரா பழங்குடியின கிராமத்தில், Co 14012 கரும்பு ரகத்தின் வயல் தின விழாவினை நடத்தியது.

இந்த நிகழ்ச்சி, பழங்குடியின பிரிவிற்கான மேம்பாட்டு செயல் திட்டம் (DAPSTC)) என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ், பழங்குடியின விவசாயியான வள்ளி சதீஷின் முதல்நிலை செயல்விளக்கம் திடலில் நடைபெற்றது.
இதில் கரும்பு இனப்பெருக்கு நிறுவன இயக்குனர் கோவிந்தராஜ், Co 14012 என்னும் புதிய ரகம், நீண்ட காலமாக பயிரிடப்படும் ரகமான Co 86032க்கு ஒரு நம்பிக்கைக்குரிய மாற்றாகச் செயல்படக்கூடும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
தொடர்ந்து புதூர் பஞ்சாயத்துத் தலைவர் சி.தங்கவேல், அகழி- வேளாண்மை உதவி எம். கோவிந்தராஜ், புத்திர பிரதாப் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

இதைத்தொடர்ந்து, Co 14012 ரகம் குறித்த விரிவாக்க வெளியீடு வெளியிடப்பட்டு, பங்கேற்கும் விவசாயிகளுக்கு Co 14012 இன் தரமான கரும்பு விதைக் கரணைகள் வழங்கப்பட்டன.
வயல் தின விழாவின் ஒரு பகுதி யாக, விவசாயிகள் Co 14012 இன் முதல்நிலை செயல்விளக்கத் திடலினை பார்வையிட்டனர். ஏறத்தாழ ஒன்பது மாதங்கள் வயதுடைய இக்கரும்பு பயிரினை சாகுபடி செய்வதில் தனது நேர்மறையான அனுபவத்தை வள்ளி சதீஷ் பகிர்ந்து கொண்டார்.

பின்னர் நடைபெற்ற கேள்வி-பதில் நேரத்தின் போது விஞ்ஞானிகள் கீதா, கோபி, அதினி எஸ்.பழனி மற்றும் ஜிஜி ஆலன் ஆகியோர் பயிர் மேலாண்மை தொடர்பான விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

வேளாண்மைத் துறை மற்றும் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலையின் மூத்த அதிகாரிகள் மற்றும் அகழி மற்றும் புதூர் பஞ்சாயத்துகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். பாலக்காடு, வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் இஸ்ரேல் தாமஸின் நன்றியுரையுடன் வயல் தின விழா இனிதே நிறைவு பெற்றது.



