மெட்டாசேஜ் அலையன்ஸ் மற்றும் கிக்கானி குளோபல் அகாடமி இணைந்து நடத்திய ‘மெட்டா இன்னோவா ஃபியூஷன் 1.0’ என்ற தொழில்நுட்ப விழா ஜனவரி 28 முதல் 30 வரை பச்சாபாளையம் கிக்கானி குளோபல் அகாடமி வளாகத்தில் நடைபெற்றது.மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் பெரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
முதல் நாளில் சிறப்பு விருந்தினராக ஐஜென் தலைவர் டாக்டர் எல்.ரமேஷ் கலந்து கொண்டு தொழில்நுட்ப அமர்வுக்கு தலைமை தாங்கினார். வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் கல்வியில் புதுமையின் அவசியம் குறித்து அவர் மாணவர்களிடையே உரையாற்றினார்.
இரண்டாவது நாளில் நடைமுறைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை மையமாகக் கொண்டு, CurioX ஆய்வகத்தில் ‘ஹேக்கத்தான்’ அமர்வுகள் நடத்தப்பட்டன. இதில் மாணவர்கள் தங்களின் பகுப்பாய்வு சிந்தனை மற்றும் குழுவாகச் செயல்படும் திறனை வெளிப்படுத்தி வியக்க வைத்தனர்.

மூன்றாவது நாள் மற்றும் நிறைவு விழாவின் இறுதி நாளில் ரோபோ வடிவமைப்புப் போட்டிகள் மற்றும் ஹேக்கத்தான் மதிப்பீடுகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில்,‘MetaInnova LMS’ ’ என்ற புதிய கல்வி மேலாண்மைத் தளம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கிக்கானி குளோபல் அகாடமி முதல்வர் ஷாலினி நாயர், தாளாளர் துஷார் கிக்கானி, நாஸ்காம் இயக்குனர் மற்றும் மாற்றம் அறக்கட்டளையின் இணை நிறுவனர் உதய சங்கர், பாரடே ஓசோன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் விவேகானந்தன் கூடலிங்கம், மெட்டாசேஜ் மேலாண்மை இயக்குனர்கள் ஜெயக்குமார் வெள்ளையன், அனுஷ் ஜெயக்குமார், ஆகாஷ் ஜெயக்குமார் மற்றும் முதன்மை செயல் தலைவர் அகிலா முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கினர்.
இந்தியாவின் முதல் பள்ளி மையப்படுத்தப்பட்ட புதுமையான எல்.எம்.எஸ் என குறிப்பிடப்படும் இந்த ‘மேட்டா இன்னோவா’ தளம், செயற்கை நுண்ணறிவு (AI), ரோபோட்டிக்ஸ் மற்றும் எதிர்கால திறன்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.



