`ஊதா தவளை, இருவாச்சிப் பறவை, வரையாடுகள் போன்ற அபூர்வமான உயிரினங்கள், விலங்குகள் நம் ஊரில் நம்மை நம்பித்தான் காடுகளில் உயிர்வாழ்கின்றன. இவற்றின் உயிர்வாழ்க்கை என்பது இயற்கையின் சமநிலை பேணுவது. அவற்றைக் காப்பது நம் கடமை’ என்று மாணவிகளிடையே வலியுறுத்தினார்’ தமிழகஅரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ ஐ.ஏ.எஸ். கோவையில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் ஜிஆர்ஜி அறக்கட்டளை, 2026 நிறுவனர்கள் தினத்தைக் கொண்டாடியது.
இந்த நிகழ்வுக்கு வந்திருந்தவர்களை ஜிஆர்ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஜி.ரங்கசாமி வரவேற்றார். நிறுவன அறங்காவலர் டாக்டர் நந்தினி ரங்கசாமி வந்திருந்த சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்தார்.
தலைமை விருந்தினராக ஈரோடு, யுஆர்சி கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தேவராஜன் சின்னுசாமி தலைமை உரையாற்றினார்.
சென்னை, ரானே (மெட்ராஸ்) (Rane Madras) லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் கௌரி கைலாசத்திற்கு அறக்கட்டளை சார்பில் 2026 ஆம் ஆண்டிற்கான சந்திரகாந்தி கேட்டலிஸ்ட் லீடர் விருது வழங்கப்பட்டது. இந்தியாவின் டிஜிட்டல் மற்றும் தொழில்முனைவோர் துறையில் ஆற்றிய முன்னோடிப் பங்களிப்பிற்காக, மேட்ரிமோனி.காம் (பாரத் மேட்ரிமோனி) நிறுவனத்தின் நிறுவனர், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் & தலைமைச் செயல் அலுவலர் முருகவேல் ஜானகிராமனுக்கு 2026 ஆம் ஆண்டிற்கான ஜிஆர்ஜி டிரெயில்பிளேசர் விருது வழங்கப்பட்டது.

நிகழ்வின் முக்கிய அம்சமாக, பெண்களின் தலைமைத்துவத்திற்கான சந்திரகாந்தி ஃபெலோஷிப் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம், பெண்களின் அதிகாரமளித்தல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தலைமைத்துவத்திற்கான ஜிஆர்ஜி அறக்கட்டளையின் நீண்டகால அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டியது. கூடுதலாக, பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் புகழ்பெற்ற முன்னாள் மாணவிகள், தங்களின் தொழில்முறைச் சிறப்பு மற்றும் அந்தந்தத் துறைகளில் அவர்கள் ஆற்றிய தொடர்ச்சியான பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, கே.சி.டபிள்யூ பிராண்ட் தூதுவர்களாக கௌரவிக்கப்பட்டனர்.
அந்த வகையில் ஹீரோ ஃபின்கார்ப் லிமிடெட்டின் மூத்த கடன் ஒப்புதல் அலுவலர் சிஏ ரமா மீனாட்சி; இந்திய அரசின் வருமான வரித் துறை துணை ஆணையர் லீனா அன்டோனெட் மரியா, ஐ.ஆர்.எஸ்; மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், அமெரிக்காவின் வணிக மதிப்பீடு, காப்பீடு மற்றும் இடர் மேலாண்மைத் துணைத் தலைவர் புவனேஸ்வரி முரளி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வின் முக்கிய அம்சமாக தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு, ஐஏஎஸ், நிகழ்வின் தலைவராக பொறுப்பேற்று வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர் ஆயிரக்கணக்கான மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் காப்பாற்றுவதன் அவசியத்தை காணொளிப் படக்காட்சிகள் மூலம் விளக்கினார்.
ஊதா தவளை, மின்மினிப்பூச்சிகள், இருவாச்சி பறவைகள், நீலகிரி வரையாடுகள், 15 வருடங்களுக்கு ஒரு முறை கடல்கடந்து வந்து குறிப்பிட்ட இடத்தில் முட்டையிடும் அபூர்வக் கடல் ஆமை குறித்தெல்லாம் விரிவாக சுப்ரியா சாஹூ எடுத்துரைத்தார். அவர் பேசியதாவது:

‘Purble Frog எனப்படும் ஊதா தவளை ஆனைமலைக் காடுகளில் காணப்படும் அபூர்வ உயிரினம். இது வருடத்திற்கு சில நாட்கள் மட்டுமே வெளியே வரும். இது மற்ற தவளை இனங்களிலிருந்து வேறுபட்டு முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தை கொண்டுள்ளது. வெல்வெட் ஊதா நிறத் தோலினால் மூடப்பட்டிருப்பதால் இதற்கு ஊதா தவளை என்று பெயர். ஊதா தவளை நிலத்தடியிலேயே வசிக்கிறது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழை காலங்களில் உண்டாகும் மழைநீர் தேக்கங்களில் இனப்பெருக்கம் செய்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிப்பதில் ஊதா நிறத் தவளைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை தரையில் துளையிட்டு வாழ்வதால், மண்ணிற்கு அடியில் காற்று உட்புகுந்து மரம் மற்றும் தாவரங்களுக்கு பெரிதளவில் உதவுகிறது. சாலையில் மழைநீர்த்தேங்கும் சில காலங்களில் மட்டும் நிலத்திற்கு வெளியே வருவதால் வாகனங்களில் அடிபட்டு சாகின்றன. இந்த வகையில் ஊதா நிறத் தவளைகள் சர்வதேச அளவில் பாதிக்கப்படக்கூடிய இனமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட அபூர்வத் தவளை நம் மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளில் ஆனைமலை புலிகள் காப்பகக் காடுகளில் உள்ளது.
அடுத்தது மின்மினிப்பூச்சிகள். ஒரே இடத்தில் கோடிக்கணக்கான மின் மினிப்பூச்சிகள் மாயாஜாலம் காட்டுவதும் நம் ஆனைமலைக் காடுகளில்தான்!’’
இந்த அபூர்வ தகவல்களை எல்லாம் பட விளக்கங்களோடு எடுத்துரைத்த சுப்ரியா சாஹூ மேலும் கடல் ஆமை, கண்டம் விட்டு கண்டம் 4000 கிலோமீட்டர் தூரம் 40 மணி நேரம் இடைவிடாமல் பறந்து வரும் பறவைகள் போன்றவற்றின் அபூர்வ குணங்கள் குறித்தெல்லாம் அவர் எடுத்துச் சொன்னார்.

இவை எல்லாம் எப்படி அழிவை நோக்கிச் செல்கின்றன, மனிதகுலத்தின் வாழ்வியல் மாறுதல்கள் எப்படியெல்லாம் இந்த இயற்கையை சீரழிக்கின்றன என்பதையும் பட விளக்கங்களாக காட்டினார்.
முதுமலைக்காடுகளில் பிளாஸ்டிக் குப்பைகளை மேயும் காட்டு யானைகள், கரடிகள் போன்ற வனவிலங்குகளோடு, இமயமலையின் எவரெஸ்ட் சிகரம் எப்படியான பிளாஸ்டிக் குப்பைகளால் நிறைந்து கிடக்கிறது என்பதையும் படங்களோடு விளக்கினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ‘‘‘சென்னை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கடல்கரையோரங்களில் பயணித்துப் பார்க்கும்போது நாம் இயற்கையை எந்த அளவு சேதப்படுத்துகிறோம். கடற்கரையோரங்களை குப்பைக்கூளங்களாக, பிளாஸ்டிக் கழிவுகளாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். இப்படி இதை அசிங்கமாக வைக்கும்போது சமுத்திரங்கள் கடந்து வரும் பறவைகள் எப்படி இடம் பெயரும்.
15 ஆண்டுகளுக்கு ஒரு முறை சென்னை கடற்கரைக்கு வந்து முட்டையிட்டு குஞ்சுபொரித்துக் கூட்டிச் செல்லும் அபூர்வக் கடல் ஆமைகள் எப்படி வரும்? இதற்கெல்லாம் மனிதனே காரணியாக மாறுகிறான்.
இந்த உலகத்தை, கண்டங்களை, பறவைகளை, உயிரினங்களை, அதன் வழித்தடங்களை, அதன் இயல்பை நானோ, நீங்களோ உருவாக்கவில்லை. இயற்கைதான் உருவாக்கியது. அந்த இயற்கையை சேதப்படுத்த நமக்கு என்ன உரிமை இருக்கிறது?. அதை உள்ளது உள்ளபடி வைத்துச் செல்வதுதான் நம் பொறுப்பு, நம் கடமை. இந்த சிந்தனையை இந்த ஜிஆர்ஜி நிறுவனர்களின் தினநாளில் ஆழ்மனதில் ஏற்றிக் கொண்டு ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்!’’.
இவ்வாறு சுப்ரியா சாஹு கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து ஜி.ஆர்.ஜி, கே.சி.டபிள்யூ-வின் ஆலோசகர் பேராசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.



