தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பருவதனஅள்ளியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சதீஷ் கலந்து கொண்டு மக்கள் திட்ட முகாமில் 51 லட்சத்து 96 ஆயிரத்து 327 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பருவதனஅள்ளி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய்த்துறை வேளாண்மை துறை தோட்டக்கலைத்துறை கால்நடை துறை மருத்துவ மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் பல்வேறு துறைகள் சார்பாக திட்ட முகாமில் கலந்து கண்டு மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில். மாவட்ட ஆட்சியர் சதீஸ் பங்கேற்று 191 பயனாளிகளுக்கு சுமார் 51 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசுகையில், அரசு திட்டங்கள் தற்போது மக்களை தேடி வருகிறது. தகுதி உடையவர்கள் அரசின் திட்டங்களில் பயனடைய வேண்டும். அரசு திட்டங்கள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி அரசின் திட்டங்களை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
தற்போது அரசின் பல்வேறு திட்டங்களால் அனைவரும் பயன் அடைந்து வருகின்றனர். மேலும் தேவையான திட்டங்கள் குறித்து உங்கள் கனவை சொல்லுங்கள் என்ற திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தங்களிடம் வரும் தன்னார்வலர்களிடம் உரிய படிவத்தில் தெரிவிக்கலாம்.
சென்ற ஆகஸ்ட் மாதம் தமிழக முதல்வர் தருமபுரி வருகையின் போது பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் செக்போஸ்ட் முதல் திப்பட்டி கூட்டுரோடு வரை சுமார் 16.4 கிலோமீட்டர் சாலையை அகலப்படுத்தவும், தேவையான இடங்களில் பாலங்கள் கட்டவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த திட்டத்திற்கு தற்போது 88.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும், என்றார். நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, பென்னாகரம் வட்டாட்சியர் சண்முகசுந்தரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்திவேல், லோகநாதன், பென்னாகரம் திமுக மத்திய ஒன்றிய பொறுப்பாளர் பச்சையப்பன் மற்றும் மக்கள் தொடர்பு திட்ட முகாம் அனைத்து துறை அலுவலர்கள் இந்த மக்கள் தொடர்பு திட்டம் முகாமில் கலந்து கொண்டனர்.



