fbpx
Homeபிற செய்திகள்நீலகிரி மாவட்டத்தில் சுழல்நிதி பெற்று பயனடைந்த மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு...

நீலகிரி மாவட்டத்தில் சுழல்நிதி பெற்று பயனடைந்த மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றி

நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் சுழல்நிதி பெற்று பயனடைந்த மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பெண்களின் நலன் கருதி பல திட்டங்களை அறிவித்து சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சுய உதவிக்குழு இயக்கத்தை மாநிலம் முழுவதும் பரவலாக்கி கல்வி, வேலைவாய்ப்பு பொருளாதார மேம்பாடு மற்றும் சுய சார்பு தன்மை மூலம் பெண்களின் நிலையை மேம்பாடு அடையச் செய்யும் நோக்கத்துடன் மகளிர் திட்டத்தின் மூலம் புதிய மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைத்தல், சுழல் நிதி, வங்கிகடன் இணைப்பு மற்றும் பெருங்கடன், தனிநபர் கடன், தொழில் முனைவோர் கடன், சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி போன்ற பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், அரசால் மகளிர் எந்த தொழில் செய்தால் வருமானத்தை பெருக்க கூடுமோ, அந்த தொழில் செய்வதற்காக கடனுதவிகளை வழங்கி, சுய உதவிக்குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை உருவாக்கி முறையான பயிற்சிகள் வழங்கி, வருமானம் ஈட்டும் தொழில் தொடங்க வங்கிக் கடன் இணைப்புகள் ஏற்படுத்தி, அரசு சுய உதவிகுழு இயக்கத்தை வலுபடுத்தியும் வருகிறது.

அதனடிப்படையில், வாசனை பயிர்கள் மற்றும் மருத்துவப்பயிர்கள் நமது அன்றாட வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பயிர்களுக்கான உற்பத்தி தொகுப்புகளை நிறுவுவதன் மூலம் உற்பத்தி திறன் மற்றும் ஏற்றுமதி திறனை அதிகரிக்கும், இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும் என்ற நோக்கத்தில், கூடலூர் வட்டம், மசினகுடி ஊராட்சி வாழைத்தோட்டம் கிராமத்தில் 20 நபர்கள் கொண்ட ஒரு குழு தேர்வு செய்யப்பட்டு, சுழல்நிதியாக 1 நபருக்கு தலா 60,000 வீதம் ரூ.12 லட்சமும், நில வாடகையாக ரூ.70,000-, உட்கட்டமைப்பு பணிக்காக ரூ.7 லட்சமும், அதற்கான பயிற்சி அளிப்பதற்காக ரூ.28,000 மற்றும் பதிவேடுகள் பெறுவதற்காக ரூ.2,000 என மொத்தம் சுழல்நிதியாக ரூ.20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இதே பகுதியில் 20 நபர்கள் கொண்ட மற்றொரு குழு தேர்வு செய்யப்பட்டு, 1 நபருக்கு 100 கோழிகள் தலா ரூ.9,000 வீதம் ரூ.1.80 லட்சமும், கூண்டு அமைக்க கூட்டுறவு தொகையாக தலா ரூ.5,000- வீதம் ரூ.1 லட்சமும், கோழி தீவனம் வாங்க ஒரு நபருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.4,000-மும், இவர்களுக்கான பயிற்சி அளிப்பதற்காக ரூ.15,000- மற்றும் பதிவேடுகள் பெறுவதற்காக ரூ.500 என கோழி வளர்ப்பிற்காக மொத்தம் சுழல் நிதியாக ரூ.3 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.
இதே போன்று ஆடு வளர்ப்பிற்காக 1 நபருக்கு 9 பெண் ஆடுகள் மற்றும் 1 ஆண் ஆடு என மொத்தம் 10 ஆடுகள் ரூ.45,000- மதிப்பிலும், காப்பீட்டு தொகையாக ரூ.9.50 இலட்சமும், தீவன சாகுபாட்டிற்காக ரூ.2.40 லட்சமும், அடர்தீவன செலவிற்காக ரூ.1.89 லட்சமும், கொட்டகை அமைக்க ஒரு நபருக்கு தலா ரூ.30,000 வீதம் 6 லட்சமும், பயிற்சிக்காக ரூ.25,000,- பதிவேடுகள் பெற ரூ.500 என மொத்தம் ரூ.20 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.


கோழி வளர்ப்பிற்காக சுழல்நிதி பெற்று பயனடைந்த பயனாளி தேவரம்மா கூறியதாவது:-
என் பெயர் தேவரம்மா. நான் மசினகுடி ஊராட்சி வாழைத்தோட்டம் கிராமத்தில் வசித்து வருகிறேன். நான் இப்பகுதியில் உள்ள மனோரஞ்சிதம் சுய உதவிக்குழுவில் ஆறு வருடமாக உறுப்பினராக இருந்து வருகிறேன். எனக்கு நீண்ட நாட்களாக கோழி வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.

இது குறித்து எனது குழுவினரிடம் கேட்டேன். பின்னர் மகளிர் திட்டத்தின் மூலம் கோழிகள் வழங்கப்பட்டதுடன், கூண்டு அமைக்க நிதியுதவி, கோழி வளர்ப்பு குறித்து பயிற்சி ஆகியவை அளித்தனர். ஆகையால், என்னால் கோழிகளை நல்ல முறையில் பராமரிக்க முடிகிறது. கோழி முட்டைகளை கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறோம்.
இதன் மூலம் எங்களுக்கு தேவையான வருமானம் கிடைப்பது மட்டுமல்லாமல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பெண்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் மகளிர் திட்டம் சார்பில் சுய உதவிக்குழுக்களுக்கு பல்வேறு கடனுதவிகளை வழங்கி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என் சார்பிலும், எனது குழுவின் சார்பிலும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்தார்.
ஆடு வளர்ப்பிற்காக மகளிர் சுய உதவிக்குழு மூலம் சுழல்நிதி பெற்று பயனடைந்த பயனாளி தேவி கூறியதாவது:-

என் பெயர் தேவி. நான் மசினகுடி ஊராட்சி வாழைத்தோட்டம் கிராமத்தில் வசித்து வருகிறேன். நான் மகளிர் சுய உதவிக்குழுவில் பத்து வருடமாக இருந்து வருகிறேன். எனக்கு நீண்ட நாட்களாக ஆடு வளர்க்க வேண்டும் என்ற விருப்பம் இருந்து வந்தது. ஆனால் எப்படி வாங்குவது என்று தெரியவில்லை. அப்பொழுது தான் மகளிர் சுய உதவிக்குழு மூலமாக ஆடு வாங்க முடியும் என தெரியவந்து, ஆடு வளர்ப்பு தொகுப்பு குழுவில் உறுப்பினராக சேர்ந்தேன். அதன் பின்னர் மகளிர் திட்டத்தின் மூலம் எனக்கு 10 ஆடுகளும், ஆடு வளர்ப்பு குறித்த பயிற்சியும் அளித்தனர்.

இப்பொழுது நான் ஆடு வளர்த்து வருகிறேன். இதன் மூலம் எனது வாழ்வாதாரம் உயரும் என நம்புகிறேன். மகளிர் திட்டம் சார்பில் சுய உதவிக்குழுக்களுக்கு பல்வேறு கடனுதவிகளை வழங்கி வரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது சார்பிலும், எனது குழுவின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டத்தில் மகளிர் திட்டம் சார்பில், சுய உதவிக்குழுக்களுக்கு பல்வேறு கடனுதவிகளை வழங்கி அவர்களது பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தினை உயர்த்தியமைக்காக, அனைத்துப் பயனாளிகளும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

தொகுப்பு: ஜி.சையத் முகம்மத்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், நீலகிரி மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img