ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித் ஈஸ்வரமூர்த்தி (25), அவரது சகோதிரி கார்த்திகா, கணவர் பிரவீனுடன் வசித்து வந்தார். இவர் கடந்த 17ம் தேதி காலை 11மணி அளவில் விபத்து ஏற்பட்டு பலத்த காயம் அடைந்தார்.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவை, அவிநாசி ரோடு கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் கடந்த 23ம் தேதி அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
தொடர்ந்து அவரது சகோதிரி கார்த்திகா, அவரது கணவர் பிரவீன் ஆகியோர் ரஞ்சித் ஈஸ்வரமூர்த்தியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார்கள்.
தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன் அவரது கல்லீரல், சீறுநீரகம், கண்கள், தோல் மற்றும் எலும்பு ஆகியவை தானமாக பெறப்பட்டது. ஒரு சீறுநீரகம் மற்றும் கல்லீரல் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனைக்கும், ஒரு சீறுநீரகம், கண்கள், தோல் மற்றும் எலும்பு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.
கே.எம்.சி.ஹெச் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு தகுந்த நேரத்தில் மிகவும் திறம்பட செயல்பட்டு உறுப்புகளை அனுப்பிவைத்தனர்.
இது குறித்து கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி, உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். உடல் உறுப்பு தானம் வழங்கிய ரஞ்சித் ஈஸ்வரமூர்த்தி குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.



